துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு அமெரிக்க அரசியல் சட்டங்களே காரணம்: ஒபாமா ஆவேசம்

அமெரிக்காவின் ஓரியன் மாநிலத்தில், 10 பேரை பலிகொண்ட துப்பாக்கிச் சூடு சம்பவம், அந்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அதிபர் பராக் ஒபாமா இன்று வெள்ளை மாளிகையில் கவலை மிகுந்த குரலில் பேசினார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஒபாமா, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் உள்ளதாகவும், அவர்களுக்காக பிராத்தனை செய்வது மட்டும் போதாது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “எப்படியோ துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் போதும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களால் தான் குற்றங்கள் நடைபெறுவதாக நாம் முடிவிற்கு வருகிறோம். ஆனால், உலகில் நம் நாட்டில் மட்டும் தான் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற முன்னேறிய நாடுகளில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்கள் மூலம் இது போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அங்கு குறைந்துள்ளன என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, தங்கள் அரசியல் தலைவர்களை, வாக்காளர்கள் அனைவரும் நடவடிக்கைகள் எடுக்க நிர்ப்பந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற அனுமதிக்கக் கூடிய அளவில் தான் நம்முடைய அரசியல் தேர்வு உள்ளது. துப்பாக்கிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு அமெரிக்காவின் தேசிய ரைபிள் அசோசியேஷன் குழுவானது மிகுந்த முட்டுக்கட்டையாக உள்ளது” என்றும் ஒபாமா குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் ஓரியான் மாநிலத்தில் உள்ள உம்பக்வா சமூகக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா 2008-ம் ஆண்டு பதவியேற்றதில் இருந்து இதுவரை 12-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top