டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரணக்கு மாற்ற வேண்டும்

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் மாநில போலீஸார் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக ஜாதி, கவுரவக் கொலைகளுக்கு எதிரான மாநாடு நேற்று முன்தினம் இரவு நடந்தது. கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் மூசா வரவேற்றார். மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு பேசியதாவது:

கடலூரைச் சேர்ந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா இறப்பு வழக்கை மாநில போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சிபிஐ விசாரணக்கு மாற்ற வேண் டும். இந்தப் பிரச்சினையை நாடாளு மன்றத்தில் எழுப்புவோம். நாடாளு மன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, மன்மோகன் சிங்கை சோனியா காந்தி இயக்குவதாக மோடி குற்றம் சாட்டினார். இப்போது மோடியை ஆர்எஸ்எஸ் நேரடியாகவே இயக்கு கிறது. பிரதமர் மற்றும் அமைச்சர் கள் தங்களது செயல்திட்ட அறிக் கையை ஆர்எஸ்எஸ் தலைமை யிடம் அளிக்க வேண்டியுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோருக்கான இட ஒதுக் கீட்டை மறு ஆய்வு செய்ய வேண் டும் என ஆர்எஸ்எஸ் வலியுறுத்து கிறது. நாடு முழுவதும் இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தபோதிலும் ஆர்எஸ்எஸ் உறுதியாக உள்ளது. மோடி அரசுப் பதவியில் இருப் பதைப் பயன்படுத்தி சாதிய சக்திகள் தங்களை வலுப்படுத்தி வருகின்றன. கடந்த 14 மாதத் தில் 25 நாடுகளுக்கு மோடி சுற்றுப் பயணம் செய்துள்ளார். இங்கே விவசாயிகள் தற்கொலை செய் வதைப் பற்றி அவர் கவலைப்பட வில்லை.

கருப்புப் பணத்தை மீட்டு ஒவ் வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங் குவோம் என்று கூறிய மோடி யையே தற்போது வெளிநாட்டில் இருந்து மீட்க வேண்டியுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3ல் ஒரு பங்கு அளவுக் கான சொத்து 100 பேரிடம் மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில், 90 சதவீத இந்திய குடும்பத்தினரின் மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.

சமூக நீதிக்காகவும், பொருளாதார நீதிக்காகவும் நாம் இணைந்து போராடினால்தான் சாதிய கொடுமைகளை ஒழிக்க முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் சமமான மதிப்பு இருக்கும் நிலையை அடைய நாம் அனை வரும் இணைந்து போராட வேண்டும்.

இவ்வாறு யெச்சூரி பேசினார். கூட்டத்தில், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன் எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் சுப்புராயன் நன்றி கூறினார். முன்னதாக, கோண்டூரில் உள்ள விஷ்ணுபிரியா வீட்டுக்கு சீத்தாராம் யெச்சூரி சென்று விஷ்ணுபிரியா படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top