விவசாயிகள் தற்கொலை செய்வது ஏன்?- ஆந்திரா, தெலங்கானா அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

ஆந்திரா, தெலங்கானாவில் விவசாயிகளின் தற்கொலை குறித்து இரு மாநில அரசுகளும் விளக்கம் அளிக்க வேண்டும் என ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் விவசாயிகள் தற்கொலை தொடர்வதாகவும், மாநில அரசுகள் இதற்கு நிரந்தரத் தீர்வு காணாமல் அலட்சியம் காட்டுவதாகவும் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இரு மாநில அரசுகளையும் கடுமையாக விமர்சித்தனர்.

“விவசாயிகளின் தற்கொலைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி செய்வதுடன் மாநில அரசுகள் பிரச்சினையை தள்ளிப் போடுகின்றன” என்று விமர்சித்த நீதிபதிகள், “ஆந்திரா, தெலங்கானாவில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்? இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு செய்த உதவிகள் என்ன? தற்கொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? போன்ற விவரங்களை இரு மாநில அரசுகளும் வரும் அக்டோபர் 13-ம் தேதிக்குள் உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர்.

தெலங்கானா சட்டப்பேரவை கூட்டம் இந்த விவகாரம் குறித்து நேற்று விவாதம் நடைபெற்றது.

போதிய மழை இல்லாததால் மாநிலத்தில் 50 சதவீத விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ எர்ரபல்லே தயாகர் ராவ் பேசும் போது, “தெலங்கானாவில் புதிய அரசு ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்றரை ஆண்டில் நாட்டிலேயே அதிக அளவாக 1,400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண் டுள்ளனர்.

டி.ஆர்.எஸ் கட்சி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வங்கிக் கடனை ரத்து செய்வதாக கூறியது. ஆனால் இதுவரை 20 சதவீதம் கூட ரத்து செய்யப் படவில்லை. உடனடியாக மொத்த கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.

இதுகுறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கே.சந்திர சேகர ராவ் தெரிவித்தார். இந்த பிரச்சினையில் காங்கிரஸ், பாஜக உறுப்பினர்களும் அரசை கடுமையாக விமர்சித்தனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top