தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டி சென்னையில் சாஸ்திரி பவன் முற்றுகை!

தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டியும், சிங்கள அரசுக்குத் துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில்
சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.

12022370_1049645845070368_1310206678186100345_o

 

போராட்டத்தின் போது  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியதாவது,

தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்கள அரசு புரிந்த இனக் கொலை, போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள், மனித உரிமை மீறல்களை மெய்ப்பிக்கும் சான்றுகளுடன் ஐநா மனித உரிமை மன்றப் புலனாய்வு அறிக்கை வெளிவந்துள்ளது.

இந்த அறிக்கையின் மீது சர்வதேச நீதி மன்ற விசாரணை நடைபெற வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் ஒருமித்த கோரிக்கை. சிங்கள சிறிலங்கா அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில், அல்லது இதற்கென்று அமைக்கப்படும் தனித் தீர்ப்பாயத்தில் கூண்டிலேற்ற வேண்டும் என்பதே தமிழீழ மக்களும் தமிழக மக்களும் உலகத் தமிழர்களும் எழுப்பிடும் நீதிக் கோரிக்கை.

12000900_1049645661737053_5042189701082159790_o

ஐநா மனித உரிமை உயர் ஆணையர் சிறிலங்கா அரசின் உள்நாட்டு நீதிப் பொறிமுறை என்ற கோரிக்கையை மறுத்து விட்டார். அதே போது கலப்பு நீதிமன்றம் அமைக்குமாறு இலங்கைக்கு யோசனை கூறியுள்ளார். இதுவும் கொலைக் குற்றத்தைக் கொலையாளியே விசாரிக்கும் நடைமுறைதான் என்று நாம் மறுதலிக்கிறோம்.

ஆனால், தமிழர்களின் கோரிக்கைக்கும் மனித உரிமை உயர் ஆணையரின் பரிந்துரைக்கும் முரணாக இப்போது மனித உரிமை மன்றக் கூட்டத்தில் அமெரிக்க வல்லரசு முன்வைத்துள்ள தீர்மானம் இலங்கை அரசைப் பாராட்டுவதாகவும், உள்நாட்டு விசாரணை என்ற அந்நாட்டின் ஆசையை நிறைவேற்றுவதாகவும் அமைந்திருப்பது உலகத் தமிழர்களுக்கும் மனித உரிமைப் பற்றாளர்களுக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. நம்ப வைத்துக் கழுத்தறுத்து விட்ட அமெரிக்காவின் வஞ்சகத் தீர்மானத்துக்கு சிங்கள அரசும் ஆதரவு தெரிவித்திருப்பதில் வியப்பில்லை.

சர்வதேச நீதிமன்ற விசாரணைதான் வேண்டும் என்று இலங்கையின் வட மாகாண சபையில் முதல்வர் மாண்புமிகு விக்னேஸ்வரன் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளார்.
தமிழகச் சட்டப் பேரவையில் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களும் சர்வதேச நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தித் தீர்மானம் கொண்டுவந்து அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு நிறைவேற்றியுள்ளார்.

12028848_1049645915070361_6705135764324742549_o

இந்த இரு தீர்மானங்களையும் இந்திய அரசு மதிப்பதாக இருந்தால், அமெரிக்காவின் வஞ்சகத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பதோடு, தமிழர்களின் கோரிக்கையான சர்வதேச நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி இந்தியாவின் சார்பில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
ஆனால் இந்திய அரசோ முன்போலவே இப்போதும் சிங்கள அரசுக்குத் துணை போகிறது.

அண்மையில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தில்லி வந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது, இரு நாடுகளும் படைத் துறையில் ஒத்துழைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி இந்திய-இலங்கைக் கூட்டு இராணுவப் பயிற்சி நாளை தொடங்க இருக்கிறது. இந்தத் தமிழினப் பகை நடவடிக்கையைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அவர் பேசினார்.

இந்திய அரசுக்கு அவர் விடுத்த கோரிக்கைகள்:

• தமிழகச் சட்டப் பேரவைத் தீர்மானத்தை மதித்து, இலங்கை அரசின் தமிழினப் படுகொலை குறித்து சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு முன்முயற்சி எடு!
• ஐநா மனித உரிமை மன்றத்தில் சிறிலங்காவுக்கு ஆதரவான அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களி!
• தமிழர்களின் நீதிக் கோரிக்கைக்கு ஆதரவாக ஐநா மனித உரிமை மன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவா!
• இலங்கையைப் புறக்கணி! இலங்கை மீது பொருளாதாரத் தடை விதி! இலங்கைக்கு இராணுவ உதவி, பயிற்சி எதுவும் வழங்காதே! இப்போதைய கூட்டு இராணுவப் பயிற்சியை உடனே கைவிடு!

11850605_1049645595070393_7160573548736989027_o

இதனை தொடர்ந்து சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்ற சுமார் 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top