இலங்கை மீது சர்வதேச விசாரணை என்பதிலிருந்து இந்தியா பின்வாங்க கூடாது: கருணாநிதி!

karunanidhi5இலங்கை மீது சர்வதேச விசாரணை என்பதிலிருந்து இந்தியா பின்வாங்க கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சர்வ தேசச் சட்ட விதிமுறைகள் அனைத்தையும் அவமதித்து, இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கடுமையான போர்க் குற்றங்கள் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் பற்றி, ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி, அங்கே மனித உரிமை மீறல்களும், போர்க் குற்றங்களும் நடந்தது உண்மை தான் என்று உறுதி செய்ததை அடுத்து, ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 30வது கூட்டத்தில், அதன் மனித உரிமை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து, சர்வ தேச நாடுகளின் நீதிபதிகளைக் கொண்ட சர்வ தேச கலப்பு நீதி மன்றம் அமைத்து விசாரணை நடைபெற வேண்டுமென்று தெரிவித்திருந்தார். ஆனால் இலங்கை அரசு உள்நாட்டு விசாரணை மட்டும் தான் நடத்துவோம்; இதிலே சர்வ தேச நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுனர்களின் யோசனைகளை வேண்டுமானால் ஏற்றுக் கொள்வோம் என்றும் தெரிவித்து வருகிறது. வரும் 2016, ஜனவரி மாதத்தில் இந்த உள் நாட்டு விசாரணையைத் தொடங்கப் போவதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது.

உள்நாட்டு விசாரணை நடத்தினால், அது பாரபட்சமற்ற, நடுநிலையான, விருப்பு வெறுப்பற்ற விசாரணையாக இருக்காது என்பதாலும்; குற்றம் சாட்டப்பட்டவரே குற்ற விசாரணையை நடத்துவது இயற்கை நீதியையே கேலிப் பொருளாக ஆக்கி விடும் என்பதாலும் தான்; உலகத் தமிழ் அமைப்புகள் அனைத்தும் சர்வ தேச விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், இந்தியா, அமெரிக்கா வின் தீர்மானத்தை ஆதரித்திட முயற்சிப்பது, இலங்கையில் நடந்த இனப் படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு உரிய நீதி வழங்க மறுப்பதாக அமைந்து விடுவதோடு; உலகத் தமிழர்களின் உள்ளத்தில் ஆறாத வடுவாகவும் ஆகி விடும் என்பதை உணர்ந்து, இதில் எச்சரிக்கையாக அடியெடுத்து வைத்திட வேண்டும் என்றே தமிழின ஆர்வலர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். எனவே இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சர்வ தேச விசாரணை வேண்டும் என்பதிலிருந்து சிறிதும் பின்வாங்கக் கூடாது என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மீண்டும் ஒரு முறை அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top