கடலூரில் சைமா சாய ஆலைகளை வெளியேற்ற வலியுறுத்தி வேல்முருகன் போராட்டம்!

25-1443185838-velmurugan-protest-cuddalore-sipcot1-600கடலுார் பெரியப்பட்டில் சைமா சாயப்பட்டறை தொழிற்சாலை துவங்கினால் காற்று, நிலத்தடி நீர் மாசுபடுவதோடு விவசாயம் பாதிக்கப்படும். மேலும், கடல் வளம் பாதிப்பதோடு மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி விடும். எனவே, சைமா சாயப்பட்டறை தொழிற்சாலையை தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் தி.வேல்முருகன் கூறியுள்ளார்.

கடலூர் சிப்காட் விரிவாக்கம்-3 (பெரியப்பட்டு) சைமா சாய ஆலைகள் தொடங்கும் பணிகளை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் பொதுமக்களும் அப்பகுதி மண்ணின் மைந்தர்களும் விவசாயப் பெருங்குடிமக்களும் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முற்றுகைப் போராட்டத்தில் பேசிய வேல்முருகன், கடலூர் சிப்காட் பகுதியானது ஏற்கெனவே மனித இனம் வாழத் தகுதியற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியின் காற்றும் தண்ணீரும் நிலமும் நச்சாகி நாசத்தை ஏற்படுத்திவிட்டது. ஆகையால் இந்த நாசகார கடலூர் சிப்காட் விரிவாக்கம்-3 (பெரியப்பட்டு) சைமா சாய ஆலைகள் தொடங்கும் பணிகளை தடுத்து நிறுத்திடவேண்டும் என்றார். திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட சாயப்பட்டறை ஆலைகள் கடலூர் சிப்காட் விரிவாக்கம் 3-ல் குடியேற்றப்பட்டுள்ளன.

அத்துடன் திருப்பூர் சாயக் கழிவுகளை சாலை வழியாக கடலூர் பகுதியில் கடலில் கொண்டு சேர்க்கவும் திட்டமிட்டுள்ளனர். கடலூர் சிப்காட் பகுதி 3-ல் இந்த நாசகார சாய ஆலைகளுக்கு கடந்த கால தி.மு.க. ஆட்சியில் அனுமதி கொடுக்கப்பட்டு அவைகள் கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன. இந்த நச்சு சாய ஆலைகள் அமைய உள்ள இடத்தைச் சுற்றி உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இப்போதும் விவசாயம் செயய்ப்பட்டு வருகிறது. கடலை மட்டுமே நம்பி மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது.

25-1443185829-velmurugan-protest-cuddalore-sipcot3-600

இந்த நிலையில் சைமா எனப்படும் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்துக்கு கடலூர் சிப்காட்-3ல் 99 ஆண்டுகால குத்தகைக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 10 சாயப்பட்டறை ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. சைமாவின் சாயப்பட்டறை ஆலைகளுக்காக 12 ஆழ்துளை கிணறுகளை 1150 அடி ஆழத்துக்கு அமைத்து நாள்தோறும் 10.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் சாயப்பட்டறைகளை சுற்றி உள்ள கிராமங்களின் ஒட்டுமொத்த நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு விடும். வெறும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ள இந்தப் பகுதி விளைநிலமெல்லாம் பாலைவனமாகி பாழ்பட்டுவிடும். அத்துடன் சாயப்பட்டறை கழிவுகளை அப்படியே கடலில் கொண்டுவிடுகிற படுபாதகத்தையும் செய்வதற்காக சைமா சாய ஆலைகள் குழாய்களைப் பதித்துள்ளன. இதனால் கடலை மட்டுமே மீன்பிடிக்கும் கடற்றொழிலாளர்கள் வாழ்வே நிர்மூலமாகிவிடும்.

இந்தப் பகுதியில் சைமா சாய ஆலைகள் அமையுமேயானால் கடலூர் சுற்றுவட்டார கிராம மக்கள் நிலமிழந்து, நீர்வளம் இழந்து, கடல்வளம் இழந்து, விவசாய வாழ்வாதாரமிழந்து புற்றுநோய் மற்றும் பல்வேறுவிதமான நோய்கள், உடல்பாதைகளால் பாதிக்கப்பட்டு செத்து மடியத்தான் நேரிடும் என்ற பேராபத்து கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் கடந்த 10 ஆண்டுகாலமாக சைமா சாயப்பட்டறை ஆலைகள் இப்பகுதிகளில் அமைக்கவே கூடாது என்று எத்தனை எத்தனையோ போராட்டங்களை நடத்திப் பார்த்துவிட்டனர் இந்த பகுதி மக்கள். ஆனால் அரசுகள் கேட்கவில்லை. கொழுத்த சாய ஆலைகளும் அப்பாவி விவசாயிகளின் வாழ்க்கையை கொத்தித் தின்ன கழுகுகளாய் பணிகளைத் தொடர்கின்றன.ஆகையால் இந்த நாசகார கடலூர் சிப்காட் விரிவாக்கம்-3 (பெரியப்பட்டு) சைமா சாய ஆலைகள் தொடங்கும் பணிகளை தடுத்து நிறுத்திட வேண்டும் என்றார் வேல்முருகன்.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக்கட்சித்தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை போலீசார் தடுத்து நிறுத்தினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top