இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி: ஆதரவாளர்களுடன் என்.சீனிவாசன் இன்று ஆலோசனை

8791a669-3254-4f8b-a037-d1d23b5cef27_S_secvpfஇந்திய கிரிக்கெட் வாரியத்தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை கைப்பற்ற போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

ஐ.சி.சி. சேர்மனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான தமிழகத்தை சேர்ந்த என்.சீனிவாசன் தனது ஆதரவாளர்களுடன் பெங்களூருவில் இன்று ரகசிய ஆலோசனை நடத்துகிறார். இதில் 8 முதல் 9 உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பாக தலைவர் பதவிக்கு தகுதியானவரை அடையாளம் காண என்.சீனிவாசன் தீவிரம் காட்டி வருகிறார்.

என்.சீனிவாசனின் பெரும்பாலான ஆதரவாளர்கள் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்டவர்கள். எனவே கிழக்கு மண்டலத்தை சேர்ந்தவரும், ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத் தலைவருமான அமிதாப் சவுத்ரி அந்த பொறுப்புக்கு முன்னிலைப்படுத்தப்பட அதிகமான வாய்ப்புள்ளது.

டால்மியாவுக்கு இரங்கல் கூட்டம் வருகிற 2-ந்தேதி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற இருப்பதால் அதுவரை பெங்கால் கிரிக்கெட் சங்க பிரதிநிதிகள் யாரும் எந்த வித கூட்டங்களிலும் கலந்து கொள்ளமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு பக்கம் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூரும், மறைமுக காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார். அவர் கிழக்கு மண்டலத்தை சேர்ந்த உறுப்பினர்களை சரிகட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவர்களின் மனஓட்டம் என்ன? ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லாவை கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தால் ஏற்றுக்கொள்வார்களா? என்பதை அறிவதில் முனைப்பு காட்டி வருகிறார். கிரிக்கெட் வாரியத்தின் அடுத்த தலைவராக வாய்ப்புள்ளதா? என்று சுக்லாவிடம் நேற்று நிருபர்கள் கேட்ட போது, ‘இப்போதைக்கு நான் என்ன சொல்ல முடியும்? இது பற்றி பேச நான் விரும்பவில்லை’ என்று நழுவினார்.

முன்னாள் தலைவர் சரத்பவார், பந்தய களத்தில் குதிக்க மாட்டார் என்று தெரிகிறது. ஏனெனில் தலைவர் பதவிக்கு வாக்களிக்க தகுதி படைத்த 30 உறுப்பினர்களில் 16 பேரின் ஆதரவு தேவை. அது சரத்பவாருக்கு இல்லை என்பதால் அவர் ஒதுங்குகிறார்.

இதற்கிடையே, டால்மியாவின் மறைவால் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியும் காலியாக உள்ளது. இந்த பதவியை கைப்பற்ற பலரும் முயற்சித்து வருகிறார்கள். இதில் முன்னாள் கேப்டனும், பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளருமான சவுரவ் கங்குலியும் ஒருவர்.

சவுரவங் கங்குலி நேற்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அவருடன் டால்மியாவின் மகன் அவிஷேக்கும் சென்றிருந்தார். பின்னர் நிருபர்களை சந்தித்த கங்குலியிடம், பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கான போட்டியில் நீங்கள் இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்து விட்டார்.

கங்குலி கூறுகையில், ‘டால்மியா மரணம் அடைந்து 3 நாட்கள் தான் ஆகி இருக்கிறது. அதற்குள் இது பற்றி பேசுவது சரியானது அல்ல. யூகங்கள் வெளிவரத்தான் செய்யும். யாராவது ஒருவர் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தை நடத்துவார். இப்போதே அது பற்றி சொல்வது முறையாகாது. டால்மியாவுடன் எனக்கு நெருக்கமான பழக்கம் உண்டு. தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு சிறப்பு வாய்ந்த நபர். எனது வாழ்க்கையில் மிக முக்கியமான நபரை இழந்து விட்டேன்’ என்றார். டால்மியாவுக்கு இரங்கல் கூட்டம் வருகிற 2-ந்தேதி நடத்தப்படுகிறது. அதில் கலந்து கொள்ளும்படி மம்தாவுக்கு அழைப்பு விடுத்ததாக டால்மியாவின் மகன் அவிஷேக் குறிப்பிட்டார்.

இருப்பினும் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை பிடிப்பதற்கு, தனக்கு ஆதரவு தரும்படி மம்தா பானர்ஜியிடம் கங்குலி கோரிக்கை விடுத்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

சித்ராக் மித்ரா, கவுதம் தாஸ்குப்தா, சுப்ரதா முகர்ஜீ உள்ளிட்ட சீனியர்களும் களத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கும் பெங்கால் கிரிக்கெட் சங்க உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. எனவே பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு கங்குலி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட சாத்தியம் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top