இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்க வரைவு தீர்மானத்தில் திருத்தம்?

unhrcஇலங்கை போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா முன்வைத்திருக்கும் வரைவு தீர்மானத்திற்கு ஒருமித்த ஆதரவு கிடைக்காததால், அதில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நீதிபதிகளை கொண்ட விசாரணை அமைப்பை இலங்கை அரசே உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய வரைவு தீர்மானம் ஒன்றை, ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா முன்வைத்துள்ளது.

இந்த தீர்மான திட்ட வரைவு அறிக்கையை உறுப்பு நாடுகளிடம் அளித்து, கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்கா கருத்து கேட்டது. இதில், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கியூபா ஆகிய நான்கு நாடுகள், சர்வதேச விசாரணையை நிராகரித்தும், உள்நாட்டு விசாரணையே போதுமானது என்றும் தெரிவித்தன.

ஐரோப்பிய நாடுகளும், கனடாவும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, சர்வதேச விசாரணை வேண்டும் என்று குரல் கொடுத்தன. ஒருமித்த கருத்து ஏற்படாததால், வரைவு தீர்மானத்தில் திருத்தம் செய்யும் முடிவுக்கு அமெரிக்கா முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வாறு திருத்தம் செய்யப்படும் மாதிரி தீர்மானமானது, உறுப்பு நாடுகளிடம் மீண்டும் அளிக்கப்பட்டு கருத்து கேட்கப்படும் என்று தெரிகிறது. இதையடுத்து, வரும் 30-ம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்க தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, ஒன்றாம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top