மக்கள்நல கூட்டு இயக்கத்தால் அரசியல் மாற்றம் வரும் -வைகோ

12038144_940505569342723_1772985350258585560_nமக்கள் நல கூட்டு இயக்கத்தால், அரசியல் மாற்றம் நிச்சயம் வரும்“ என்று கலிங்கப்பட்டியில் நேற்று நடந்த விழாவில், வைகோ கூறினார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில், தன்னுடைய உதவியாளர் சந்துருவுக்கு, வைகோவும், அவருடைய தம்பி ரவிச்சந்திரனும் இணைந்து, சொந்த செலவில் ஒரு வீடு கட்டி கொடுத்து உள்ளனர். அந்த இல்ல திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு பட்டு வேட்டி, சட்டை அணிந்து வந்த வைகோ முன்னிலை வகித்தார். ம.தி.மு.க. மாநில அவை தலைவர் திருப்பூர் துரைச்சாமி தலைமை தாங்கி இல்லத்தை திறந்து வைத்து பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஹைதர் அலி மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். நெல்லை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் சரவணன் வரவேற்றுப் பேசினார்.

வைகோ பேசும் போது கூறியதாவது:–

ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து உருவாக்கி இருக்கும் மக்கள் நல கூட்டு இயக்கத்தால், 2016–ல் நிச்சயம் அரசியல் மாற்றம் வரும். ம.தி.மு.க.வை விட்டு பிரிந்தவர்கள், பதவிக்காகத்தான் சென்றுள்ளனர். அதற்கு ஏற்றார் போல், தாமரை கண்ணனுக்கு சேலமும், சோமுவுக்கு காஞ்சீபுரமும் உறுதியாகி உள்ளது.

நாம் ஜெயித்த போது, பதவி கிடைத்த போது கண்ணப்பனுக்கும், செஞ்சி ராமச்சந்திரனுக்கும் பதவி வாங்கி கொடுத்து அழகு பார்த்தவன் நான். ஜெயிலில் இருந்து வந்த போது, சிப்பிப்பாறை ரவிச்சந்திரனை எம்.பி. ஆக்கினேன்.

சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவன் நான். கட்சிக்கு என் மகன் உள்பட யாரும் வரமாட்டார்கள். ம.தி.மு.க. இயக்கம் தொண்டர்கள் உருவாக்கப்பட்டது. அவர்கள் கட்சியை பார்த்துக் கொள்வார்கள். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிக்கும் சேர்த்து மொத்தம் 35 சதவீத ஓட்டுகள்தான் உள்ளது. மற்ற 65 சதவீதம் பேர் நடுநிலையாளர்களாக உள்ளனர். அவர்கள் மக்கள் நல கூட்டு இயக்கத்துக்கு வாக்கு அளிப்பார்கள். அதன் மூலம் வரும் தேர்தலில் நல்ல மாற்றம் வரும். இவ்வாறு வைகோ பேசினார்.

தொல்.திருமாவளவன் பேசும் போது “மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான் மக்கள் நல கூட்டு இயக்கம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நாங்கள் கொள்கைக்காக களத்தில் நிற்கிறோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பவர், வைகோ. பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசாக்கப் போவதாக கூறுகிறார். நாடு சுதந்திரம் அடைந்து, 70 ஆண்டுகள் ஆகியும், இன்றும் வீட்டுமனை பட்டாவுக்கு போராட வேண்டிய நிலைமை, உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை. விடுதலை சிறுத்தைகள் சேர்ந்ததால், சிலர் விலகிக்கொள்வதாக கூறி வருகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் என்ன தீண்டத்தகாத கட்சியா? இந்த கூட்டணிக்காக எந்த இழப்பையும் தர தயாராக உள்ளதாக வைகோ கூறினார். நாங்களும் அவருடன் இணைந்து நிற்போம். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்“ என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், “2016–ல் மாற்றம் ஒன்றை வேண்டியே கூட்டணி அமைத்துள்ளோம். அந்த மாற்றம் வரும். மாற்றுக் கருத்துகளை உடையவர்களை ஒரே மேடையில் வைகோவினால் மட்டுமே உட்கார வைக்க முடியும். நாங்கள் முதல்–அமைச்சர் வேட்பாளர் யார்? என்று அறிவிக்கவில்லை, என்கிறார்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் ஒருவரை முன்னிறுத்துவார்கள். மக்கள் நல கூட்டு இயக்கம் செயல்படுவது ஒருவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் ஆள் பிடிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். மாற்றத்தை விரும்பும் மக்கள் எங்கள் கூட்டணியை ஆதரிப்பார்கள்“ என்றார்.

ஜி.ராமகிருஷ்ணன் பேசும் போது, “கலிங்கப்பட்டிக்கு வந்ததை மகிழ்ச்சியாக உணர்கிறேன். மதுவிலக்கு போராளியான 92 வயது அன்னை மாரியம்மாளை சந்தித்தது மேலும் மகிழ்ச்சியை தருகிறது. பாராளுமன்றத்தில் நாங்கள் ஊழலுக்கு எதிராக போராடிய போது, அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. எம்.பி.க்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை. எனவே நாங்கள் மாற்றம் வேண்டும் என்று கேட்டதில் தவறு என்பதே இல்லை. மக்கள் நல கூட்டு இயக்கத்தில் உள்ள இருவரைக்கூட 2 கட்சிகளும் வாங்க முடியாது. மாற்றம் ஏற்படுவதை உங்களால் தடுக்க முடியாது“ என்றார்.

விழாவில் புதிய தமிழகம் கட்சி செய்தி தொடர்பாளர் அரவிந்தராஜா, மக்கள் கண்காணிப்பக தலைவர் ஹைன்றி திபேன், தமிழ் புலிகள் அமைப்பு தலைவர் நாகை.திருவள்ளுவன், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன், தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் பெருமாள், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் உள்ளிட்டோர் பேசினார்கள். வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் நன்றி கூறினார். ம.தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜேந்திரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி, புலவர் செந்தியப்பன், நெல்லை பெருமாள், மின்னல் முகம்மது அலி மற்றும் திரளானவர்கள் கலந்துகொண்டனர். விழாவுக்கு வந்திருந்த தலைவர்கள், வைகோவின் தாயார் மாரியம்மாளை சந்தித்து ஆசி பெற்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top