நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை; சோனியா, ராகுல் காந்திக்கு சிக்கல்!

கடந்த ஆகஸ்ட் மாதம் முடித்து வைக்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை முறைகேடு வழக்கை, அமலாக்கத் துறை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை. இந்தப் பத்திரிகை தற்போது வெளிவரவில்லை. ஆனால், அந்தப் பத்திரிகையை காங்கிரஸ் கட்சி கடந்த 2010-ம் ஆண்டு வாங்கியது. அதற்காக காங்கிரஸ் நிதியில் இருந்து கணிசமான தொகை வழங்கப்பட்டது. ஆனால், நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்றவே, காங்கிரஸ் நிதியை சோனியாவும், ராகுல் காந்தியும் தவறாகப் பயன்படுத்தினர் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். மேலும், பத்திரிகையை வாங்கியதற்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக அமலாக்கத் துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், வழக்கில் சில சட்டரீதியிலான காரணங்களுக்காக சோனியா, ராகுலை தொடர்புபடுத்த முடியாது என்று கூறி அமலாக்கத் துறையின் முன்னாள் இயக்குநர் ராஜன் எஸ்.கடோச் விசாரணையை முடித்துக் கொண்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், அமலாக்கத் துறை இயக்குநர் பதவியில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை ராஜன் நீக்கப்பட்டார். அவருக்கு பதில், மூத்த ஐபிஎஸ் அதிகாரி கர்னால் சிங் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சோனியா, ராகுல் தொடர்புடைய நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கை அமலாக்கத் துறை மீண்டும் விசாரிக்க தொடங்கி உள்ளது. மேலும், இந்த வழக்கை முடித்துக் கொள்ளலாம் என்று ராஜன் கூறிய பரிந்துரையையும் அமலாக்கத் துறை நிராகரித்துவிட்டது.

இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் ஓரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top