முஷாரபுக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத கைது வாரன்ட்; நேரில் ஆஜராகாததால் பாக். நீதிமன்றம் நடவடிக்கை

154பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு எதிராக அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிபந்தனையுடன் கூடிய ஜாமீனில் வெளியில் வர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்தது.

முஷாரபுக்கு எதிரான தேசத் துரோக வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய இருந்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பைசல் அராப் தலைமையிலான 3 பேர் அடங்கிய அமர்வு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

“முஷாரப் மார்ச் 31-ம் தேதிக் குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். அவ்வாறு ஆஜராகாவிட்டால் அவரை ஜாமீனில் வெளியில் வர முடியாத வகையில் கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது” என சிறப்பு நீதிமன்ற பதிவாளர் அப்துல் கனி சூம்ரோ தெரிவித்தார்.இந்த வழக்கின் அடுத்தகட்ட விசா ரணையை வரும் 20-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

“நீதிமன்ற உத்தரவு கிடைத்த பிறகு, அதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளோம்” என முஷாரபின் வழக்கறிஞர்களில் ஒருவரான பைசல் சவுத்ரி தெரிவித்தார்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, முஷாரப் தரப்பு வழக்கறிஞர் அகமது ரசா கசூரி ஒரு மனுவை சமர்ப்பித்தார். அதில் முஷாரப் உயிருக்கு அச் சுறுத்தல் இருப்பதால், அவருக்கு பாதுகாப்பு அளித்து வரும் சுமார் 1,600 வீரர்களின் பின்னணி குறித்து ஆராய வேண்டி உள்ளது. இதற்கு 6 முதல் 8 வார காலம் ஆகும் என்பதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து முஷாரபுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மேலும், இந்த விவகாரத்தில் ராணுவத்துக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. குறிப்பாக பிரதமர் நவாஸ் ஷெரீப் பழி வாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார் என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்நிலையில், முஷாரபுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை. இதுவரை அவரது பாதுகாப்புக்காக ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளது என அரசுத் தரப்பு வழக்கறிஞர் அக்ரம் ஷேக் தெரிவித்தார்.

முஷாரப் நேரில் ஆஜராகா விட்டால் அவரது வழக்கறிஞர் முன்னிலையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்தார். ஆனால், முஷாரப் ஆஜராகாத நிலையில் குற்றச்சாட்டு பதிவு செய்யக் கூடாது என அவரது வழக்கறிஞர் கசூரி தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த செவ்வாய்க்கிழமை முஷாரப் ஆஜராக வில்லை. இதையடுத்து வெள் ளிக்கிழமை ஆஜராகும்படி மீண்டும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top