தமிழக சட்டசபை தீர்மானத்தை அங்கீகரித்து அமெரிக்க தீர்மானத்துக்கு எதிராக மத்திய அரசு வாக்களிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

vbk-31-vaiko-1ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இலங்கைத் தீவில் கோரமான ஈழத்தமிழ் இனப் படுகொலை நடத்திய சிங்களப் பேரினவாத அரசாங்கத்தையும், அதை நடத்திய மாபாதகன் ராஜபக்சே கூட்டத்தையும், சரத் பொன்சேகா உள்ளிட்ட சிங்கள ராணுவத்தினரையும் அனைத்துலக நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி உரிய தண்டனைக்கு ஆளாக்கும் தீர்வினை நோக்கி முதல்கட்ட நகர்வாகவே செப்டம்பர் 16–ம் தேதி அன்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமை ஆணையர் அல்சையத் ராஃப் உசேன் அறிக்கையும், கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினரான மார்ட்டி அட்டிசாரி, சில்வியா கார்ட்ரைட், ஜஹாங்கீர் தாக்கல் செய்த அறிக்கையும் அமைந்துள்ளன.

கடந்த வருடம் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு 2002–ம் ஆண்டிலிருந்து 2011–ம் ஆண்டுவரை நடைபெற்ற சம்பவங்கள் குறித்து மட்டுமே விசாரணை மேற்கொண்டது. ஆனால், 1948 பிப்ரவரி 4 –ல் இலங்கை சுதந்திரமான நாளிலிருந்து தமிழர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டதையும், ஈழத்தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதையும், தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதையும், தமிழ் குழந்தைகள் ஈவு இரக்கமின்றி சாகடிக்கப்பட்டதையும், தமிழர்களின் நூலகம் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டதையும், இந்தப் பின்னணியில் 1976 மே 14–ல் வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா செய்த சுதந்திரத் தமிழ் ஈழ பிரகடனத்தையும், 1983 கருப்பு ஜூலையில் வெலிக்கடை சிறை படுகொலை உள்ளிட்ட தமிழர் படுகொலைகளையும், 1995–ல் 5 லட்சம் தமிழர்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேற நேர்ந்தது உள்ளிட்ட 2014 வரை ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அனைத்துக் கொடுமைகளையும் முழுமையாக ஆய்ந்து அறிய பன்னாட்டு விசாரணைக் குழுவை அமைக்கும் விதத்தில், அக்டோபர் 2 வரை நடைபெறும் ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலின் 30–வது அமர்வுக் கூட்டத்தில் உறுப்பு நாடுகள் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

நீதியைப் புதைத்து சிங்கள அரசை பாதுகாக்கும் குறிக்கோளுடன் அமெரிக்க உள்ளிட்ட எந்த நாடு தீர்மானம் கொண்டுவந்தாலும் அந்தத் தீர்மானத்தை உறுப்பு நாடுகள் தோற்கடிக்க வேண்டும்.

அப்படி அமைக்கப்படும் அனைத்துலக விசாரணை நீதிமன்றத்தில் இலங்கையைச் சேர்ந்த எவரும் நீதிபதிகளாகவோ, வழக்காடு பவராகவோ இடம்பெறக் கூடாது. இலங்கையைச் சேர்ந்த தமிழர்களே நியமிக்கப்பட்டாலும் நீதி கிடைக்காது என்று இலங்கையின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய வடக்கு மாகாண முதல்வருமான விக்னேஸ்வரன் மிகச் சரியாகக் கூறியுள்ளதை மனித உரிமை கவுன்சில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனித உரிமைக் கவுன்சில் அமைக்கும் பன்னாட்டு விசாரணைக் குழுவில் இனக்கொலை செய்த இலங்கையைச் சேர்ந்தவர்களோ, அக்கொலைக்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசு பரிந்துரைப்பவரையோ அங்கம் வகிக்க இடம் தரலாகாது. இனக்கொலைக் குற்றக் கூண்டில்தான் சிங்களர்கள் நிறுத்தப்பட வேண்டும்.

தமிழக சட்டமன்றம் 2015 செப்டம்பர் 16–ல் நிறைவேற்றிய தீர்மானத்தை இந்திய அரசு அங்கீகரித்து, அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.

சிங்களர் எவ்விதத்திலும் இடம் பெறாத பன்னாட்டு விசாரணைக் குழுவை அமைக்க மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

இதைச் செய்ய தவறினாலோ, சிங்களக் கொலைகார அரசுக்கு உதவுகின்ற செயலில் ஈடுபட்டாலோ நரேந்திர மோடி அரசும் தமிழ் இனக்கொலைக்கு துணைபோகும் அரசு என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரும் என்பதையும், அதனுடைய விளைவுகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே எதிர்காலத்தில் கேள்விக்குறியாகும் என்பதையும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் திட்டவட்டமாக தெரிவிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top