கருப்பு பணத்தை மீட்பதில் மத்திய அரசு மென்மையாக நடந்து கொள்ளாது நிதி மந்திரி அருண்ஜெட்லி உறுதி

arunjetleeகருப்பு பணத்தை மீட்பதில் மத்திய அரசு மென்மையாக நடந்து கொள்ளாது என்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார்.

டெல்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி பேசும்போது கூறியதாவது:–

கணக்கில் காட்டாத கருப்பு பணத்தை மீட்பதில் மத்திய அரசு மென்மையாக நடந்து கொள்ளாது. ஏனெனின் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ள இலக்கை அடைய அதிகப்படியான வளத்தை(கருப்பு பணம்) முறையான கணக்கிற்கு கொண்டு வருவது மிகவும் அவசியம் ஆகும்.

கருப்பு பணம் என்பது ஒரு சில தனிப்பட்ட நபர்களின் எல்லைக்கு உட்பட்ட பிரச்சினையாக மட்டுமே இருக்கிறது. இவர்களுக்கு முறைப்படி நோட்டீசு அனுப்பி முறையான கணக்கை காட்டுவதற்கு நியாயமான வாய்ப்பும் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரம் கருப்பு பண பிரச்சினையை ஏற்க மறுப்பவர்களிடம் அரசு வித்தியாசமான அணுகுமுறையை கையாளும்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இந்தியர்கள் வைத்துள்ள கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

உள்நாட்டு கருப்பு பண பிரச்சினையில் மென்மையாக நடந்து கொள்ளுங்கள் என்று சிலர் தங்களுடைய பிரதிநிதிகள் மூலம் என்னிடம் கோரிக்கை வைக்கின்றனர். இது மிகவும் கடினமான ஒன்றாகும். நாட்டின் பொருளாதாரத்தை நிரந்தரமாக முடக்கக் கூடிய இதுபோன்ற ஒரு கோரிக்கையை ஏற்க இயலாது.

அதே நேரம் வரி தொடர்பான ஒவ்வொரு கோரிக்கையையும் வரி பயங்கரவாதம் என்று கூறி விட இயலாது. ஏனென்றால் மிகவும் அதிகமான வருமான வரியை யாரும் மகிழ்ச்சியுடன் செலுத்த விரும்புவதில்லை. எனவே வரிச் சலுகை கோரிக்கை என்பது வரி பயங்கரவாதம் அல்ல.

அடுத்த சில நாட்களில் தொழில் நிறுவனங்களுக்கான வரி விகிதத்தை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கும். அடுத்த 4 ஆண்டுகளுக்கு இந்த வரி விகித முறை இருக்கும். முதல் கட்டமாக வரி விலக்கு பற்றிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

உலக நாடுகளின் வரி விதிப்பு நிலைக்கு ஏற்பவும், வெளிநாடுகளின் போட்டியை சமாளிக்கவும் இந்த வரி குறைப்பு அளிக்கப்படுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை அமல்படுத்தும் தேதி எனது கட்டுப்பாட்டில் இல்லை. இது தொடர்பான சட்ட திருத்த மசோதாவை நிறைவேறவிடாமல் காங்கிரஸ்தான் தடுக்கிறது.

தற்போது இந்த மசோதாவை அனைவரும் ஆதரிப்பதால் அது பாராளுமன்றத்தில் நிறைவேறிவிடும் என்று நம்புகிறேன். இந்த மசோதா நிறைவேறிவிட்டால் மறைமுக வரி வட்டாரம் மிகவும் எளிதாகிவிடும்.

முக்கியத்துவம் வாய்ந்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு இடையூறு செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை காங்கிரசால் சிலகாலம் தான் தடுத்து வைக்க முடியும். ஒரு வகையில் இதில் உளைச்சலான நிலை இருப்பதும் நல்லதுதான். ஏனெனில் இதுபோன்ற நிலையில் இந்தியா இன்னும் வளர்ச்சி அடையவே செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top