ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் இடஒதுக்கீடு வழங்காமல் ஆசிரியர்களை தேர்வு செய்வது அரசியல் சட்டத்தை மீறுவதாகும்; ஐகோர்ட்டு உத்தரவு

ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் இடஒதுக்கீடு வழங்காமல் ஆசிரியர்களை தேர்வு செய்வது அரசியல் சட்டத்தை மீறுவதாகும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

தடைவேண்டும்

சென்னை ஐகோர்ட்டில், முரளிதரன் என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் இயக்குனராக பாஸ்கர் ராமமூர்த்தி உள்ளார். இவரை அப்பதவியில் இருந்து நீக்கக்கோரி வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்துக்கு ஆசிரியர் பணிக்கான தேர்வு நடவடிக்கைகளை இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி மேற்கொண்டு வருகிறார்.

அவரை இயக்குனராக நியமித்ததை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அவர் ஆசிரியர் பதவிக்கான தேர்வை நடத்த முடியாது. மேலும், இந்த ஆசிரியர் தேர்வு, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் நடைபெறுகிறது. எனவே, இந்த தேர்வுக்கு தடைவிதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

தடை முடியாது

இந்த வழக்கில், இடைக்கால தடைகேட்டு தொடரப்பட்ட மனுவை நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், ‘ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தியை பதவி நீக்கம் செய்யக்கோரிய வழக்கின் வாதத்தை விரைவாக நடத்த தயாராக உள்ளதாக, இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி சார்பில் ஆஜரான வக்கீல் கூறினார். எனவே, இந்த சூழ்நிலையில், ஆசிரியர் தேர்வுக்கு தடைவிதிக்க தேவையில் இல்லை என்று கருதுகிறேன்.

மேலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காமல், ஆசிரியர் தேர்வை ஐ.ஐ.டி. இயக்குனர் மேற்கொள்வது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். அதனால், இந்த ஆசிரியர் தேர்வு, இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரதான வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. இந்த இடைக்கால மனுவை முடித்து வைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top