பட்டேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு: டெல்லியிலும் போராட விரும்புவதாக ஹர்திக் பட்டேல் பேட்டி

d0b003e3-2fe7-4f3c-8236-399be763c509_S_secvpfபட்டேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு குஜராத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்து, கலவரம் சற்றே ஓய்ந்துள்ள நிலையில் இதே கோரிக்கையுடன் டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோவிலும் போராட்டம் நடத்த நினைப்பதாக இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கிவரும் ஹர்திக் பட்டேல் இன்று தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும்படி போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை ‘பட்டேல் அனாமத் அந்தோலன் சமிதி’யின் அமைப்பாளர் ஹர்திக் பட்டேல் தலைமையேற்று நடத்தி வருகிறார்.

இந்தப் போராட்டத்தின் போது ஹர்திக் கைதான தகவல் காட்டுத் தீ போல பரவியது. இதனால் பட்டேல் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் ஆமதாபாத், சூரத், மெஹ்சானா, ராஜ்கோட் மாவட்டங்களிலும், சவுராஷ்டிரா பகுதியிலும் பயங்கர வன்முறை வெடித்தது. குஜராத் இடஒதுக்கீடு போராட்டத்தில் 10 பேர் பலியானார்கள்.

கலவரத்தில் மந்திரிகளின் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 200 வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதையடுத்து. கலவரத்தை அடக்க அங்கு ராணுவம் விரைந்தது. தற்போது அங்கு அமைதி நிலவி வரும் நிலையில் புதுடெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் லக்னோவில் போராட்டம் நடத்த நினைப்பதாக ஹர்திக் பட்டேல் தெரிவித்து உள்ளார்.

இன்று டெல்லி வந்துள்ள ஹர்திக் பட்டேல், செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவிலும் இதே கோரிக்கைக்காக போராட்டம் நடத்த நினைக்கிறோம். டெல்லியில் இருந்து ஆதரவு பெறவேண்டும் என்றாலும் அதனை பெறுவோம். இந்தியா முழுவதும் இந்தப் போராட்ட இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இது 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் அல்ல. இது மராத்தான். இதேபோல் ஒதுக்கீடு கேட்டும் அனைத்து பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம். குறிப்பாக குஜ்ஜர் மற்றும் ஜாட் இனத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறிய ஹர்திக் பட்டேல், ஒரு தீவிரவாதிக்காக நள்ளிரவு வேளையில் சுப்ரீம் கோர்ட்டை திறந்து விசாரணை நடத்த முடியும்போது, இதேபோல், மற்றவிஷயங்களும் மாறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top