12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ந்தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்: மத்திய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

28b90542-820d-4cc1-999e-df567a57bc35_S_secvpfவிலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஊக வணிகத்தை தடை செய்ய வேண்டும், அடிப்படை தொழிலாளர் நல சட்டங்களை விதிவிலக்கு தராமல் அமல்படுத்த வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும், குறைந்தபட்ச மாதாந்திர கூலியை ரூ.15 ஆயிரம் ஆக உயர்த்த வேண்டும், ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய வரையறையை உயர்த்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையை நிறுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசிடம் தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.

இதில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், செப்டம்பர் 2-ந்தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. கடந்த 2 நாட்களாக மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி உள்ளிட்ட மூத்த மந்திரிகள், முன்னணி தொழிற்சங்க தலைவர்களை சந்தித்து பேசினர்.

அப்போது குறைந்தபட்ச கூலியை உயர்த்தி, அதை அனைவரும் கட்டாயம் பின்பற்றச்செய்வது உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கினர். ஆனால் அவற்றில் தொழிற்சங்க தலைவர்கள் திருப்தி அடையவில்லை. அதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி 2-ந்தேதி வேலைநிறுத்தம் செய்வதில் தொழிற்சங்கங்கள் உறுதியாக உள்ளன.

இந்தநிலையில் 11 மத்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. அதன்பின்னர் ஐ.என்.டி.யு.சி. தலைவர் ஜி. சஞ்சீவ ரெட்டி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “இதுவரையில் அரசிடம் இருந்து எங்களுக்கு எந்தவொரு உறுதியான திட்டமோ, வாக்குறுதியோ வந்து சேரவில்லை. எனவே செப்டம்பர் 2-ந்தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் உறுதியாக இருக்கிறோம்” என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “மத்திய தொழிற்சங்கங்கள் கூடுதல் தகவல்களை 31-ந்தேதி வெளியிடும்” என கூறினார்.

அதே நேரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவு பெற்ற பாரதீய மஸ்தூர் யூனியன், “தொழிற்சங்கங்கள் இப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது. அரசு தரப்பில் தரப்பட்டுள்ள வாக்குறுதிகளை பரிசீலிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த பாரதீய மஸ்தூர் யூனியனின் பொதுச்செயலாளர் விர்ஜேஷ் உபாத்யாய் நிருபர்களிடம் பேசுகையில், “அரசியல் செய்வதற்காக நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம். அரசு அளித்துள்ள வாக்குறுதிகளை மதித்து 6 மாத அவகாசம் தரவேண்டும் என்று தொழிற்சங்கங்களை கேட்டுக்கொண்டோம்” என கூறினார்.

ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா நிருபர்களிடம் பேசுகையில், “கடைசி நேரத்தில் பாரதீய மஸ்தூர் யூனியன் வேலை நிறுத்த முடிவில் இருந்து பின்வாங்கியது துரதிர்ஷ்டவசமானது. மத்திய அரசின் நிலைப்பாடு தெளிவற்றதாகவும், காலங்கடத்துவதாகவும், எதிர்மறையானதாகவும் உள்ளது. எனவே வேலை நிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய காரணம் ஏதும் இல்லை” என கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top