செப்டம்பர் 1-ல் அமெரிக்கத் தூதரகம் முற்றுகை: வைகோ அறிவிப்பு!

வைகோஈழத்தமிழர்கள் விஷயத்தில் அமெரிக்க அரசு செய்த துரோக நடவடிக்கையைக் கண்டித்து மதிமுக சார்பில் சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

” 2014 இல் மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க அரசு கொண்டுவந்த தீர்மானம், நீதியை நிலைநாட்டும் தீர்மானம் அல்ல எனினும், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க அனைத்துலக நாடுகளின் விசாரணைக்குழு அமைக்கக் கோரியது.

இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றது போர்க்குற்றங்கள் அல்ல, தமிழ் இனப்படுகொலை என்பதுதான் சரியான நிலைப்பாடு ஆகும். இருந்தபோதிலும் இதுகுறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட அனைத்துலக நாடுகளின் விசாரணைக் குழுவை இலங்கைக்குள் நுழைவதற்கே ராஜபக்சே அரசு அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்குள் நுழைவதற்கும் நரேந்திர மோடி அரசும் அனுமதிக்கவில்லை.

அமெரிக்க அரசின் யோசனைப்படிதான் ஐக்கிய தேசியக் கட்சியும், இலங்கை சுதந்திரக் கட்சியும் இணைந்து இலங்கை தேசிய அரசு அமைத்துள்ளது. 1948 க்குப் பின் முதன்முதலாக இப்போதுதான் இப்படி ஒரு அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழர்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகடைக்காய் ஆக்கப்பட்டுவிட்டது.

இனி, தமிழர் தாயகத்தில் இருந்து சிங்கள இராணுவம் வெளியேறாது; வடக்கு, கிழக்கு இணைப்பு நடக்காது; இனப்படுகொலை விசாரணையை உலக நாடுகள் நடத்தாது.

அமெரிக்க அரசின் மன்னிக்க முடியாத துரோகம் யாதெனில், நடந்து முடிந்த தமிழ் இனப் படுகொலையை முழுமையாக மறைத்து, போர்க்குற்ற விசாரணையை கொலைகார சிங்கள அரசிடமே ஒப்படைக்க முடிவு செய்ததுதான். இதை, தற்போது இலங்கைக்கு வந்துள்ள தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறைத் துணைச் செயலாளர் லிசா எனும் பெண்மணி திமிரோடு தெரிவித்து உள்ளார்.

சிங்களக் கொலைகார அரசின் ஆலோசனையின்படிதான் ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானத்தைத் தாக்கல் செய்வோம் என்றும் கூறி விட்டார்.

ஈழத் தமிழ் இனக்கொலையாளியான சிங்கள அரசாங்கத்தையே இதுபற்றி விசாரணை நடத்தும் தீர்ப்பாளியாகவும் ஆக்குவதற்கு முற்பட்டுள்ள அமெரிக்க அரசின் செயல் மன்னிக்க முடியாத துரோகச் செயல் ஆகும். ஈழத் தமிழ் இனத்தைக் கரு அறுக்க முற்பட்டுள்ள சிங்கள அரசோடு அமெரிக்க ஏகாதிபத்தியம் பகிரங்கமாகவே கைகோர்த்து விட்டது. இனி உலக நாடுகளிலும் நீதியை எதிர்பார்க்க வேண்டாம். இந்திய அரசும் இதே துரோகத்தைத்தான் செய்யப்போகிறது.

எனவே, ஈழத்தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான தாய்த் தமிழகத்துத் தமிழர்கள், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், அமெரிக்க – இலங்கை சதித் திட்டத்தை முறியடிக்கவும், ஈழத் தமிழ் இனத்தைப் பாதுகாக்கவும் வீறுகொண்டு எழவேண்டிய நேரம் வந்துவிட்டது. அர்ப்பணிக்கும் வேளை வந்துவிட்டது. உத்தமத் தியாகி முத்துக்குமாரின் மேனியைப் பற்றி எரித்த நெருப்புத் தழலை நெஞ்சில் ஏந்திக் களம் காண்போம்.

அமெரிக்க அரசின் தமிழ் இனத் துரோகத்தைக் கண்டித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று செவ்வாய் கிழமை காலை 10 மணி அளவில்,சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதராலயத்துக்கு எதிரே என்னுடைய தலைமையில் கண்டன அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கழகக் கண்மணிகளும், ஈழத் தமிழ் உணர்வாளர்களும் ஆர்ப்பரித்து அறப்போரில் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top