இருதரப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சுவார்த்தை இந்த மாதம் 23 மற்றும் 24–ந் தேதிகளில் நடக்கும்

90இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் 23–ந் தேதி இந்தியா வருகிறார்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கடந்த மாதம் ரஷியாவின் உபா நகரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, இருதரப்பு பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தையை இந்த மாதம் 23 மற்றும் 24–ந் தேதிகளில் நடத்த இந்தியா விரும்பியது. அதன்படி இந்த பேச்சுவார்த்தைக்கான திட்டங்கள் தயாரிப்பில் இரு நாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடுத்தடுத்த தாக்குதல்களை அரங்கேற்றினர். மேலும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தியபோது உயிருடன் பிடிபட்ட தீவிரவாதியும், பாகிஸ்தானை சேர்ந்தவன் என்பது உறுதியானது.

பாகிஸ்தானின் இந்த இரட்டை வேடத்தனம் இந்தியாவுக்கு கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இது குறித்து தனது கோபத்தை பாகிஸ்தானிடம் இந்தியா வெளிப்படுத்தியது.

ஆனால் காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவன் அல்ல என்று மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான், அந்த தாக்குதல் இந்திய தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்றும் கூறியது.

இந்த காரணங்களால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் நிலவியது. எனினும் இந்த சந்திப்பை ரத்து செய்வது தொடர்பாக எந்த தகவலையும் இரு நாடுகளும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் இந்த சந்திப்பை பாகிஸ்தான் நேற்று உறுதி செய்தது. இது தொடர்பாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் கூறுகையில், ‘ஆம் இந்த சந்திப்பை என்னால் உறுதி செய்ய முடியும். இதற்காக 23–ந் தேதி நான் இந்தியா செல்கிறேன்’ என்றார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் நடத்திய ஆலோசனைக்குப்பின் இந்த பயணத்துக்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக சர்தாஜ் அசிஸ் மேலும் கூறினார்.

இந்தியா வரும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிசுடன், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்வார்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top