‘சுதந்திர தினத்தை முன்னிட்டு விமானங்கள் பறக்க தடை’ 500 கண்காணிப்பு கேமராக்கள், 40 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பில் மோடி தேசிய கோடி ஏற்றுகிறார்

terror-2-1_647_080515081742

நாளை சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சுதந்திர தினம், நாளை கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல், டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார். அவர் அங்கு தேசிய கொடி ஏற்றுவது, இது 2–வது முறை ஆகும்.

சமீபத்தில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரிலும், காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரிலும் தாக்குதல் நடந்ததால் . சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு, டெல்லி நகரம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், துணை ராணுவப்படையினர் மற்றும் டெல்லி போலீசார் 12 ஆயிரம் பேர் ஆவர். அவர்கள், விழா நடைபெறும் செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் நிறுத்தப்படுகிறார்கள்.

செங்கோட்டை அருகே உள்ள உயர்ந்த கட்டிடங்களில், குறிபார்த்து சுடும் வீரர்கள் நிறுத்தப்படுகிறார்கள். போக்குவரத்து போலீசார், வழக்கம்போல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவுக்கு கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. பிரதமர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், செங்கோட்டைக்கு வரும் வழிநெடுகிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். செங்கோட்டையைச் சுற்றிலும் மட்டும் 500–க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படுகிறது.

விழா நடைபெறும் மைதானத்துக்குள், தண்ணீர் பாட்டில், செல்போன், தொலைநோக்கி, குடை, ரிமோட் கண்ட்ரோல் கார் சாவி, கைப்பை, சூட்கேஸ், டிரான்சிஸ்டர், சிகரெட் லைட்டர், டிபன் பாக்ஸ் ஆகியவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டைக்கு வரும் வழியில், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்துகிறார். அதனால், அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தரையில் மட்டுமின்றி, வானத்திலும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. ஹெலிகாப்டர்களில் பறந்தபடி உன்னிப்பாக கண்காணிப்பார்கள். செங்கோட்டைக்கு மேலே விமானங்களோ, ஹெலிகாப்டர்களோ பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வான்வழி தாக்குதலை முறியடிக்க, விமான எதிர்ப்பு பீரங்கிகள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. விரைவு அதிரடிப்படை, மோப்ப நாய்ப்படை, வெடிகுண்டு கண்டறியும் படை ஆகியவையும் தயார்நிலையில் உள்ளன.

உத்தரபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களின் எல்லையை ஒட்டி, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகன சோதனை நடந்து வருகிறது. ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்கி இருப்பவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

குறிப்பிட்ட பகுதிகளில், நாளை காலை 5 மணி முதல் 9 மணிவரை, பொது போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. பொதுமக்கள், சொந்த வாகனங்களில் செல்லாமல், மெட்ரோ ரெயில்களில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே சமயத்தில், மெட்ரோ ரெயில் நிலையங்களில், வாகன நிறுத்தங்களை, நாளை காலை முதல் பகல் 2 மணிவரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ், ரெயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றிலும், முக்கிய கட்டிடங்களான பாராளுமன்றம், இந்தியா கேட், முக்கிய அமைச்சகங்கள் செயல்படும் வடக்கு, தெற்கு பிளாக்குகள் ஆகியவற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மும்பை தாக்குதல் பாணியில், கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி, மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.

தாமரை கோவில், நொய்டாவில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்கள், செங்கோட்டை ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

பா.ஜனதா அலுவலகங்கள், பா.ஜனதா தலைவர்கள், சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்கள் ஆகியவற்றின் மீதும் அல்–கொய்தா இயக்கம் குறி வைத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்திய உயர் அதிகாரிகள் பயணம் செய்யும் காபூல்–டெல்லி வழித்தட ஏர் இந்தியா விமானங்களை கடத்தவோ அல்லது தகர்க்கவோ பாகிஸ்தான் உளவுப்படை திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. கொச்சியில் உள்ள தென்பிராந்திய கடற்படை தலைமையகம் உள்ளிட்ட கடற்படை தளங்கள் தகர்க்கப்படலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top