பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானம் தோல்வி; சுஷ்மா சுவராஜ்–ராகுல் காந்தி பரஸ்பர குற்றச்சாட்டு

susma -rahulபாராளுமன்றத்தில் காங்கிரஸ் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானம் தோல்வி அடைந்தது. மந்திரி சுஷ்மா சுவராஜும் ராகுல் காந்தியும் பரஸ்பரம் குற்றம் சாட்டினார்கள்.

நிதி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தரா ராஜே மற்றும் வியாபம் ஊழல் காரணமாக மத்திய பிரதேச முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் வற்புறுத்தி அமளில் ஈடுபடுவதால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை) முடிவடைய இருக்கும் நிலையில், நேற்றும் இந்த பிரச்சினையால் சபை நடவடிக்கைகள் முடங்கின. நேற்று சபை கூடியதும் சமீபத்தில் மரணம் அடைந்த முன்னாள் எம்.பி.க்கள் பாலேஸ்வர் ராம், ஜெகநாத் சிங் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அது முடிந்ததும், லலித் மோடி விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கோரி பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அப்போது, ஒத்திவைப்பு தீர்மானம் தான் சம்பந்தப்பட்டது என்பதால் அது குறித்து தான் பேசும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் இருக்க வேண்டும் என்று சுஷ்மா சுவராஜ் கூறினார்.

அதன்பிறகு, ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்த மல்லிகார்ஜூன கார்கே விவாதத்தை தொடங்கி வைத்து பேசுகையில் கூறியதாவது:–

லலித் மோடிக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவியதாக வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறுகிறார். அப்படி உதவி செய்வதாக இருந்தால் அதை அவர் சட்ட ரீதியாக செய்து இருக்கவேண்டும். இந்த பிரச்சினை தொடர்பாக அவர் தனது அமைச்சக அதிகாரிகளுடன் கூட ஆலோசிக்கவில்லை. போர்ச்சுக்கல் நாட்டில் உடல்நலம் இன்றி சிகிச்சை பெற்று வரும் தனது மனைவியை லலித் மோடி சென்று பார்க்க தேவையான ஆவணங்களை இரு நாடுகளுக்கும் (இந்தியா, இங்கிலாந்து) இடையேயான உறவு பாதிக்காமல் இருக்கும் வகையில் வழங்குமாறு இங்கிலாந்து அதிகாரியை வாய்மொழியாக கேட்டுக் கொண்டதாக சுஷ்மா சுவராஜ் கூறுகிறார்.

இதன் மூலம் இந்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக அவர் செயல்பட்டு உள்ளார். லலித் மோடிக்கு உதவியதாக சுஷ்மா சுவராஜே ஒப்புக்கொண்டு இருப்பதால்தான் அவர் ராஜினாமா செய்யவேண்டும் என்று நாங்கள் வற்புறுத்துகிறோம். லலித் மோடிக்கு சுஷ்மா சுவராஜின் கணவரும், மகளும் வக்கீலாக உள்ளனர்.

லலித் மோடியின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்குமாறு டெல்லி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யாதது ஏன்? இதற்கு பிரதமர் பொறுப்பா? நிதி அமைச்சகம் பொறுப்பா? அல்லது வெளியுறவு அமைச்சகம் பொறுப்பா? என்பது பற்றி தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசினார். அவர் பேசும் போது, அவர் பதவி விலகவேண்டும் என்று கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் அவர்கள் கைகளில் வைத்து இருந்தனர்.

அமளிக்கு இடையே சுஷ்மா சுவராஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

லலித் மோடிக்கு மனிதாபிமான அடிப்படையில்தான் நான் உதவினேன். இதில் நான் எந்த தவறும் செய்யவில்லை. லலித் மோடியிடம் இருந்து எனது கணவரோ, மகளோ ஒரு ரூபாய் கூட பெற்றது கிடையாது.

மத்தியில் முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்த போது, 4 ஆண்டுகளாக லலித் மோடி மீது அமலாக்கப்பிரிவு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதுதான் இங்கிலாந்தில் தங்கி இருக்கும் உரிமையை லலித் மோடி பெற்றார்.

போபால் விஷவாயு சம்பவத்துக்கு காரணமாக யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் அப்போது அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல காங்கிரஸ் உதவியது.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அடுத்த முறை விடுமுறையில் செல்லும் போது, தனது குடும்ப வரலாற்றை அவர் படித்துப்பார்க்க வேண்டும். அப்படி படித்துப்பார்த்த பின் தனது தயாரிடம் (சோனியா காந்தி), போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் குற்றவாளி குவாத்ரோச்சியிடம் இருந்து பெற்ற தொகை எவ்வளவு? என்றும், தனது தந்தை (ராஜீவ் காந்தி) போபால் விஷவாயு குற்றவாளியை தப்பிச்செல்ல அனுமதித்து ஏன்? என்றும் கேட்க வேண்டும்.

இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பேசினார்கள். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு பதிலடி கொடுத்தார். நேற்று சபைக்கு பிரதமர் மோடி வரவில்லை. அதற்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:–

மகாத்மா காந்தியின் 3 குரங்குகளைப் போல இந்த அரசு எதையும் பார்க்க மறுக்கிறது, கேட்க மறுக்கிறது, பேச மறுக்கிறது. சபைக்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்து நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் தைரியம் பிரதமருக்கு இல்லை. மனிதாபிமான அடிப்படையில் பலர் உதவி செய்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு உதவியை ரகசியமாக செய்த முதல் நபர் சுஷ்மா சுவராஜ்தான். லலித் மோடிக்கு ரகசியமாக உதவி செய்தது ஏன்?

நான் சுஷ்மா சுவராஜிடம் ஒரேயொரு கேள்விதான் கேட்கிறேன். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் லலித் மோடியிடம் இருந்து எவ்வளவு பணம் பெற்றீர்கள்?

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்போவதாக முன்பு பிரதமர் வாக்குறுதி அளித்தார். அதைக் கேட்டு மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தனர். அந்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறார்.

‘‘நானும் லஞ்சம் வாங்க மாட்டேன்; மற்றவர்களையும் லஞ்சம் வாங்க விடமாட்டேன்’’ என்று கூறிய பிரதமர் தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தனது மந்திரிகள் செய்யும் முறைகேடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார். இந்த விஷயத்தில் நீங்கள் என்ன பேசப்போகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள நாட்டு மக்கள் காத்து இருக்கிறார்கள்.

இந்தியாவில் கருப்பு பணத்தின் மையமாக ஐ.பி.எல். உள்ளது. லலித் மோடி கருப்பு பணத்தின் அடையாளமாக விளங்குகிறார்.

சுஷ்மா சுவராஜ் நேற்று என்னை சந்தித்த போது, எனது கையை பிடித்துக் கொண்டு, ‘‘என் மீது ஏன் கோபமாக இருக்கிறீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம், ‘‘நான் உங்கள் முகத்தை நேராக பார்த்து உண்மையை பேசுகிறேன். அப்படி நான் பேசும் போது நீங்கள் என்னை நேராக பார்க்காமல் தலையை தாழ்த்திக் கொள்கிறீர்கள்’’ என்று கூறினேன்.

லலித் மோடிக்கும் வசுந்தரா ராஜேவுக்கும் இடையேயான உறவு வர்த்தக நடவடிக்கை சம்பந்தப்பட்டது என்று நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறுகிறார். வர்த்தக நடவடிக்கை என்றால் அதில் ஒருவர் பலன் அடைபவராக இருப்பார். இந்த விஷயத்தில் பலன் அடைந்தது யார்? என்பதை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

சிவசேனா உறுப்பினர் ஆனந்தராவ் விதோபே அட்சுல் பேசுகையில், சுஷ்மா சுவராஜ் மீது தேவை இல்லாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக கூறினார்.

தெலுங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர் ஜிதேந்தர் ரெட்டி பேசுகையில், சபை நடவடிக்கைகள் முடக்கப்படுவது குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, சுஷ்மா சுவராஜ் எந்த தவறும் செய்யவில்லை என்றார்.

உறுப்பினர்கள் தினேஷ் திரிவேதி (திரிணாமுல் காங்கிரஸ்), பர்துருஹரி மகதாப் (பிஜு ஜனதாதளம்) ஆகியோரும் பேசினார்கள்.

பின்னர் விவாதத்துக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி பதில் அளித்து பேசினார். அப்போது, மந்திரி சுஷ்மா சுவராஜ் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை இல்லாதவை என்றும், எனவே அவர் ராஜினாமா செய்யமாட்டார் என்றும் கூறினார்.

அவர் பேசி முடித்ததும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதன்பிறகு ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது குரல் ஓட்டெடுப்பு நடைபெற்றது. ஓட்டெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top