நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர் மீது பாலியல் புகார்: மாணவ– மாணவிகள் போராட்டம்

nellai sduநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு வரலாற்று துறைக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு புதிதாக பேராசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் எம்.ஏ. வரலாற்றுத்துறை முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடம் கற்று கொடுத்து வந்தார்.

அந்த பேராசிரியர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது மாணவ, மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி வந்ததோடு, ஆபாச வார்த்தைகளால் பேசி வருவதாக மாணவர்கள் புகார் கூறினர். மேலும் பாடம் குறித்து மாணவ, மாணவிகள் சந்தேகம் கேட்க செல்லும் போது, அந்த பேராசிரியர், மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேசினாராம். தட்டிக்கேட்கும் மாணவர்களிடம் தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவதாகவும் மிரட்டினாராம்.

இந்நிலையில் இன்று காலை பல்கலைக்கழகத்திற்கு வந்த வரலாற்றுத்துறையை சேர்ந்த மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஆபாசமாக பேசி வரும் பேராசிரியரை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, வரலாற்று துறைக்கு புதிதாக பேராசிரியர் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினர்.

இதில் 20 மாணவிகள் மற்றும் 7 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவ– மாணவிகளின் போராட்டத்தால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பல்கலைக்கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், மாணவர்களிடம் கோரிக்கை குறித்து பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் செய்யுங்கள் என்றனர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பதிவாளரிடம் புகார் செய்தனர். மாணவர்கள் புகார் கூறிய பேராசிரியர் மீது ஏற்கனவே கடந்த ஆண்டு படித்த மாணவிகளும் பாலியல் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும் போது, பாலியல் ரீதியாக பேசி வரும் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்கலைக்கழக பதிவாளரிடம் பலமுறை புகார் செய்து விட்டோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான் இன்று போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top