பேராசிரியர் பணியிடம் நிரப்ப பரிந்துரை செய்ததாக ‘வியாபம்’ ஊழலில் ம.பி. முதல்வர் மீது குற்றச்சாட்டு

69

வியாபம் ஊழல் விவகாரத்தில் திடீர் திருப்பமாக பல்கலைக்கழக பேராசிரியர் பணியிடங்களுக்கு சிலரின் பெயர்களை மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பரிந்துரைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தை மையம் கொண்டுள்ள வியாபம் ஊழல் வழக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தால் மழைக்கால கூட்டத்தொடர் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்த ஊழலில் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீது இதுவரை நேரடியாக எவ்வித புகாரும் இல்லாத நிலையில் இப்போது அவரும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளார்.

இதுகுறித்து ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: மாக்கன் லால் சதுர்வேதி தேசிய இதழியல், மக்கள் தொடர்பு பல்கலைக்கழகத்தில் காலியாக இருந்த மூத்த பேராசிரியர் பணியிடங்களுக்கு சிலரின் பெயர்களை முதல்வர் சவுகான் பரிந்துரை செய்துள்ளார். இதுதொடர்பான மூன்று பரிந்துரை கடிதங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன.

முதல்வரின் தனிச்செயலர் மூலம் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழக துணை வேந்தருக்கு பரிந்துரை கடிதங்கள் அனுப்பப் பட்டுள்ளன. அதன்பேரில் 2010 அக்டோபரில் துணைவேந்தர் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சமூக ஆர்வலர் புரந்து சுக்லா கூறியபோது, எந்த அடிப்படையில் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது இப்போது புரிகிறது என்றார்.

இதுகுறித்து பல்கலை துணைவேந்தரிடம் கேட்டபோது, பரிந்துரை கடிதங்கள் வந்தது உண்மைதான், ஆனால் அதன் அடிப்படையில் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்தார்.

வியாபம் ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளி ஜெகதீஷ் சாகரின் ரூ.15 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top