முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியா – 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது

ausஏ அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது ஆஸ்திரேலியா. இதன்மூலம் 3-வது வெற்றியைப் பதிவு செய்த ஆஸ்திரேலியா, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

சென்னையில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் கேப்டன் உன்முக்த் சந்த் 5 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 61 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் குவித்தார். 3-வது வீரராக களமிறங்கிய மணீஷ் பாண்டே ரன் எடுக்க ஓடியபோது, ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டுடன் மோதியதில் அவருடைய கன்னத்தில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறிய பாண்டே, 5-வது விக்கெட் விழுந்த பிறகு மீண்டும் களமிறங்கி அதிரடியாக ஆடினார். அவர் 38 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முன்னதாக கருண் நாயர் 32, சஞ்சு சாம்சன் 23 ரன்கள் எடுத்தனர். இறுதியில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்தது இந்தியா.

ஆஸ்திரேலியத் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் உஸ்மான் கவாஜா 18 ரன்களில் ஆட்டமிழக்க, 3-வது வீரராக களமிறங்கிய கிறிஸ் லின், இந்திய பந்துவீச்சாளர்களை பதம்பார்த்தார். அதிரடியாக ஆடிய அவர் 61 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் 45 ரன்களிலும், பின்னர் வந்த ஹேண்ட்ஸ்காம்ப் 19 ரன்களிலும், மேத்யூ வேட் 5 ரன்களிலும், ஆஷ்டன் அகர் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா ஆட்டம் கண்டது. 34.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆனால் 7-வது விக்கெட்டுக்கு இணைந்த கேலம் பெர்குசன்-ஆடம் ஸம்பா ஜோடி அசத்தலாக ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது. 49 பந்துகளைச் சந்தித்த ஸம்பா 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 48.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. கேலம் பெர்குசன் 45 ரன்களுடனும், ஜேம்ஸ் பட்டின்சன் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியத் தரப்பில் கரண் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் இந்தியா அல்லது தென் ஆப்பிரிக்காவை சந்திக்கவுள்ளது ஆஸ்திரேலியா.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top