நெல்லையில் வியாபாரியிடம் பணம் மோசடி: டிராபிக் ராமசாமி மீது வழக்கு

08-1433756856-traffic-ramasamy66நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் சண்முகம் (வயது64). முறுக்கு வியாபாரி. இவர் கடந்த 2010 ம் ஆண்டு மளிகை கடையில் சோப்பு வாங்கினார். அந்த சோப்பில் பரிசு கூப்பன் இருந்தது.

அந்த கூப்பனை அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சண்முகம் அந்த கூப்பனை சென்னையில் உள்ள அந்த சோப்பு நிறுவன முகவரிக்கு அனுப்பினார். அப்போது அந்த நிறுவனம் சண்முகத்துக்கு பரிசு இல்லை என கூறி மறுத்துவிட்டது.

இதையடுத்து சண்முகம் தன்னை தனியார் சோப்பு நிறுவனம் ஏமாற்றிவிட்டதாக கூறி நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு சண்முகத்துக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான பரிசு வழங்கவேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சோப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்தது. இந்தநிலையில் சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி இலவச சட்ட உதவி மையம் நடத்துவதாக தகவல் அறிந்து சண்முகம் அவரது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டார்.

போனில் விவரங்களை கேட்ட டிராபிக் ராமசாமி இது தொடர்பாக தனது வக்கீல் முத்துகிருஷ்ணன் என்பவரை அணுகுமாறு கூறினார். இதைத்தொடர்ந்து சண்முகம முத்துகிருஷ்ணனை அணுகினார். அப்போது அவர் வழக்கு நடத்துவதற்கு செலவாக ரூ.10 ஆயிரத்தை எங்கள் வங்கி கணக்கில் போட்டு விடுங்கள் என்று கூறினாராம்.

இதையடுத்து சண்முகம் ரூ.10 ஆயிரம் அனுப்பினார். அதன்பிறகு வழக்கு தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் கடத்தியுள்ளனர். ஏமாற்றம் அடைந்த சண்முகம் இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதுபற்றி தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப் –இன்ஸ்பெக்டர்கள் மகாலட்சுமி, ஷேக் ஆகியோர் விசாரித்து சண்முகத்திடம் மோசடி செய்ததாக பிரிவு 420ன் கீழ் டிராபிக் ராமசாமி, முத்துகிருஷ்ணன் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top