ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க தமிழகத்திற்கு அதிகாரம் உண்டு: தமிழக அரசு வாதம்!

supreme_court_1514205gராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு அதிகாரம் இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, மாநில நலனை கருத்தில் கொண்டு அவர்களை விடுவிக்க அரசுக்கு அதிகாரம் இருப்பதால்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

ஆனால், மத்திய அரசு தன்னுடைய அதீத அதிகாரத்தை பயன்படுத்தி மாநில அரசின் அதிகாரத்தை நசுக்கக் கூடாது என்றும் வழக்கறிஞர் வாதிட்டார். குற்றவாளிகளை விடுவிப்பதில் குற்றம் நடந்த தருணத்தையும், தன்மையையும் கருதினால், யாருக்கும் தண்டனை குறைப்பு சாத்தியம் கிடையாது என்றும் தமிழக அரசு வழக்கறிஞர் ராகேஷ் திவேதி குறிப்பிட்டார்.

குற்ற வழக்குகள் அனைத்திலும் மத்திய அரசின் ஆலோசனையை பெறுவது சாத்தியமற்றது என கூறிய அவர், அவ்வாறு பின்பற்றினால் ஆண்டுக்கு 23 லட்சம் வழக்குகளில் ஆலோசனை பெற வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டினார்.

கருணை மனு மீது ஆளுநரும், குடியரசுத் தலைவரும் எத்தனை முறை வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம் என குறிப்பிட்ட தமிழக அரசு வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, முடிவெடுப்பதற்கு எந்த உச்சவரம்பும் நிர்ணயிக்கக் கூடாது என வாதிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top