வால்பாறை பகுதியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை வனத்துறையினர் விரட்டியடித்தனர்

வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக இங்குள்ள காட்டு யானைகள் கூட்டம் அருகில் உள்ள கேரள மாநிலம் சாலக்குடி அடர்ந்த வனப்பகுதிக்கும் அக்காமலை புல்மேட்டை ஓட்டியுள்ள கேரள வனப்பகுதிகளுக்கும் சென்றன.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 3-ந்தேதி தேதி முதல் வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்தது. இதனால் இங்குள்ள தேயிலை தோட்டங்கள் பசுமை சூழ்நிலைக்கு திரும்பின. கேரள வனப்பகுதிகளுக்கு சென்றிருந்த காட்டு யானைகள் கூட்¢டம் மீண்டும் வால்பாறை வனப்பகுதிகளுக்கு கொஞ்சம், கொஞ்சமாக வரத்தொடங்கி விட்டன.

இந்த நிலையில் பன்னிமேடு எஸ்டேட் வழியாக 3 குட்டிகளுடன் 7 யானைகள் கொண்ட கூட்டமும், நீரார் உபாசி வனப்பகுதி வழியாக 4 யானைகளும் வந்தன. இந்த யானைகள் பன்னிமேடு சோலையார்நகர், குரங்குமுடி, முருகன் எஸ்டேட் பகுதிகளில் சுற்றித்திரிந்தன. பின்னர் அவை புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியை ஓட்டியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

உபாசி வழியாக வந்த 4 யானைகளில் பெண் யானை ஒன்று பிரிந்தது. அந்த யானை சிறுகுன்றா எஸ்டேட் கீழ்பிரிவு பகுதி தேயிலைத்தோட்ட தொழிலாளர் குடியிருப்புக்கு முன்புறமுள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் முகாமிட்டு நின்று கொண்டு இருந்தன. மற்ற 3 யானைகள் ஈட்டியார் எஸ்டேட்டிற்கும் சிங்கோனா எஸ்டேட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் நின்று கொண்டு இருந்தன.

குடியிருப்பையொட்டி உள்ள தேயிலை தோட்டத்தில் ஒற்றை யானை முகாமிட்டு கொண்டு இருந்ததால் அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள், பொதுமக்கள் பீதி அடைந்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் வனச்சரக அலுவலர் கிருஷ்ணசாமி உத்தரவின் பேரிலும், வனவர் முனியாண்டி தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தேயிலை தோட்டத்திற்குள் நிற்கும் யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த சிறுகுன்றா எஸ்டேட் பகுதியானது வால்பாறையில் இருந்து சின்னக்கல்லார், சிங்கோனா,நீரார் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரோட்டின் ஓரத்தில் அமைந்து உள்ளது. வால்பாறைக்கு சுற்றுலா வந்த பயணிகள் குடியிருப்பு அருகே யானை நிற்பதை பார்த்து தங்கள் வாகனங்களை நிறுத்தி, அதை கேமராவில் படம் பிடித்தனர்.

சுற்றுலா பயணிகளின் செய்கையால் யானை அங்கிருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக வனத்துறையினர் ரோட்டில் நின்றிருந்த சுற்றுலா பயணிகளை யானையை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து செல்லுமாறு அறிவுரை வழங்கினர். பின்னர் அந்த காட்டு யானையை அங்கிருந்து வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

இருந்த போதிலும் சிங்கோனா, ஈட்டியார், காஞ்சமலை, சிறுகுன்றா எஸ்டேட் பகுதி மக்கள் இரவு நேரத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும், தனியாக வெளியே செல்லக்கூடாது. குடியிருப்புக்கு அருகில் யானைகள் வந்தால் வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். யானைகளை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் கேட்டு கொண்டு உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top