சென்னையில் டாஸ்மாக்கை அடித்து நொறுக்கிய மாணவர்கள்: போலீஸ் தடியடியால் பதற்றம்!

tasmac attack chennaiசென்னை அமைந்தகரையில் உள்ள டாஸ்மாக் கடையை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திடீரென அடித்து நொறுக்கினர். அப்போது, மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட வந்த காந்தியவாதி சசிபெருமாள், கடந்த சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின்போது உயிரிழந்தார்.

சசிபெருமாளின் திடீர் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால், தமிழகம் முழுவதும் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள், அரசியல் கட்சியினர், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக்கை அகற்ற கோரிய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை அமைந்தகரையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மாணவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது, இரண்டு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது மோதலில் முடிந்தது. அப்போது, சில மாணவர்கள் அங்கிருந்த டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர். இந்த போராட்டத்தில் புரட்சிகர மாணவர் இயக்கத்தினரும் சேர்ந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்களின் போராட்டம் அதிகரிக்கவே காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். சிலரது மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பல மாணவர்களின் கை, கால்கள் உடைந்தது. இந்த போராட்டத்தை தொடர்ந்து சென்னை ஹாரிங்டன் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை உடனடியாக மூடப்பட்டது.

டாஸ்மாக்கை அகற்றக்கோரி நடந்த போராட்டத்தில் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top