இந்திய விண்வெளி ஆராய்ச்சி- ஆண்ட்ரிக்ஸ் – தேவாஸ் ஒப்பந்தம்: ரூ.578 கோடி முறைகேடு ;அமலாக்கத் துறை வழக்குப்பதிவு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வர்த்தகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்துக்கும், தனியார் நிறுவனமான தேவாஸுக்கும் இடையே நடைபெற்ற ஒப்பந்தத்தில் ரூ.578 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படும் புகார் குறித்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை பிரிவின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையின் பெங்களூரு பிரிவு சார்பில் கடந்த மார்ச் மாதம் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஜிசாட்-6, ஜிசாட்-6ஏ ஆகிய செயற்கைக்கோள்களின் மூலம் எஸ்-பாண்ட் அலைவரிசையைப் பயன்படுத்தி, செல்லிடப்பேசிகளுக்கு விடியோக்கள், மின்னணு குறுந்தகவல் உள்ளிட்ட சேவைகளை அளிக்க, தேவாஸ் நிறுவனத்துடன் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதில், தேவாஸ் நிறுவனம் ரூ.578 கோடி அளவுக்கு அதிக லாபம் பெறும் வகையில், ஆண்ட்ரிக்ஸ் நிறுவன அதிகாரிகள் வழிவகை செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து ஆண்ட்ரிக்ஸ் நிறுவன இயக்குநர் உள்ளிட்ட பலர் மீது, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி குற்றச் சதி செய்ததாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், அமலாக்கத் துறை சார்பிலும் விசாரணை தொடங்கவுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், “சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தனிநபர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் நடைபெற்றுள்ள குற்ற நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு விரைவில் சம்மன் அனுப்பப்படும்’ என்று தெரிவித்தன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top