சிறையில் என்னை யாருடனும் பேச விடாமல் தடுக்கிறார்கள் தனிமை அறையில் வைத்திருக்கிறார்கள்; பெண் மாவோயிஸ்டு நீதிபதியிடம் புகார்

oiகோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் கேரளாவைச் சேர்ந்த ரூபேஷ், சைனி, அனூப், கண்ணன், வீரமணி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாவோயிஸ்டுகளான இவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

கடந்த 22–ந் தேதி அனூப் தவிர மற்ற 4 பேரும் கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆறுமுகம் ‘மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்ட போது அவர்களிடமிருந்து கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவற்றுடன் அவர்களின் கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டியதுள்ளது. எனவே கையெழுத்து பெற அனுமதிக்க வேண்டும்’ என்றார்.

அதற்கு மாவோயிஸ்டுகள் தரப்பு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இரு தரப்பினரும் தங்கள் மேற்கோள்களை சமர்ப்பிக்க நீதிபதி பொங்கியப்பன் உத்தரவிட்டார்.

மேலும் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படும் போதுதான் இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை 29–ந் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

அதன்பேரில் இன்று ரூபேஷ் தவிர மற்ற 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ரூபேசை கேரள போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளதால் அவர் ஆஜர் படுத்தப்படவில்லை என்ற விவரத்தை அரசு வக்கீல் ஆறுமுகம் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 31–ந் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

நீதிபதி முன்பு மாவோயிஸ்டுகள் ஆஜர்படுத்தப்பட்ட போது பெண் மாவோயிஸ்டு ஷைனி கண்ணீர் மல்க நீதிபதியிடம் முறையிட்டார். சிறையில் தன்னை யாருடனும் அதிகாரிகள் பேச விடுவதில்லை.

என்னுடன் யாராவது பேசினால் அவர்களையும் தடுக்கிறார்கள். தனி அறையில் வைத்துள்ளனர். என்னை பார்க்க வருபவர்கள் வழங்கும் பொருள்களை என்னிடம் தருவதில்லை என்று கூறினார்.

அதற்கு நீதிபதி ‘உங்கள் குற்றச்சாட்டை மனுவாக சமர்ப்பியுங்கள்’ என்று கூறினார். அதன்பேரில் அவரது வக்கீல்கள் ஷைனியின் புகாரை மனுவாக தாக்கல் செய்தனர்.

கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஷைனியை அவரது மூத்த மகள் ஆமி 5 நிமிடம் சந்தித்து பேசினார். மாவோயிஸ்டுகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரும் போது அவர்கள் என்.எல்.சி.பிரச்சினையை அரசு உடனடியாக தீர்க்க வேண்டும், டெல்டா விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தியாகிகள் தினத்தை போற்றுவோம், பொதுமக்களுக்காக போராடும் எங்களை கைது செய்வதா? என்று கோஷம் எழுப்பினார்கள்.

பலத்த பாதுகாப்புடன் போலீசார் அவர்களை மீண்டும் சிறைக்கு அழைத்துச்சென்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top