தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் பிரதமரை சந்திக்க, ரெயில் மூலம் டெல்லி பயணம்

former தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும், விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 60 வயது விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும்.

வன விலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ஆனால் இதுவரை விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாததால் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச முடிவு செய்தனர்.

இதற்காக இன்று காலை அச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பொதுச்செயலாளர் பழனிவேலு, மாவட்ட தலைவர்கள் கரூர் இளங்கோ, திருச்சி சண்முக சுந்தரம், புதுக்கோட்டை சேகர், நாகை முருகன், தஞ்சை குருநாதன், முருகன், கரூர் பழனிவேல், செல்வம், ராமலிங்கம், வேதாரண்யம் சண்முகம் உள்ளிட்ட 300 விவசாயிகள் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டனர்.

இதனால் ரெயில் நிலையத்தில் பச்சை துண்டுகளுடன் விவசாயிகள் கூட்டமாக காணப்பட்டது. அவர்கள் 5 மூட்டைகளில் திருவோடுகளையும் எடுத்து சென்றனர். சென்னையில் இருந்து அவர்கள் டெல்லிக்கு ஜி.டி. எக்ஸ்பிரஸ் மூலம் பயணிக்க உள்ளனர்.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கும் போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து தமிழக விவசாயிகளை காக்க வேண்டும், தலித் மக்களின் பஞ்சமி நிலங்களை மீட்டு ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்த உள்ளனர்.

விவசாயிகள் தங்களுடன் திருவோடுகளையும் எடுத்து செல்வதால் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திருச்சியில் விவசாயிகளின் பரிதாப நிலையை உணர்த்தும் வகையில் திருவோடுகளை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை இவர்கள் நடத்தியது குறிப்பிடதக்கது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top