கேரளா யோசனைப்படி கண்காணிப்பு துணைக்குழு வைகை அணை குறித்து ஆய்வு; தமிழகத்திற்கு பாதகம் ஏற்படுமென மூத்த பொறியாளர்கள் அச்சம்

mullai_periyarமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் திசைதிருப்பும் யோசனைப்படி கண்காணிப்பு துணைக்குழு வைகை  அணை நிலை குறித்து நாளை ஆய்வு நடத்துவதால் தமிழகத்திற்கு பாதகம் ஏற்படுமோ என்ற அச்சம் மூத்த பொறியாளர், விவசாயிகள் மத்தியில்  எழுந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க அமைக்கப்பட்டுள்ள மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் நாதன்  தலைமையிலான மூவர் குழு கடந்த ஜூன் 22ம் தேதி ஆய்வு நடத்தியது. அப்போது கேரளா சார்பில் ‘‘பெரியாறு அணையில் நீர்மட்டம் உயரத்  துவங்கும் போதே, அணையைத் திறந்து வைகை அணைக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரியாறு அணையில் 142 அடி  வரை தேக்கும் நோக்குடன் திட்டமிட்டு காத்திருக்கும் நிலை உள்ளது. அம்மாதிரி காத்திருக்காமல் திறக்கவேண்டும். இதற்காக வைகை அணை  நிலையை கண்காணிப்பு குழு ஆய்வு செய்ய வேண்டும்,’’ என்று வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து கண்காணிப்பு குழுவின் துணைக்குழு ஜூலை 28ல் (நாளை) வைகை அணையை ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. இந்த  குழுவில் கேரள அரசின் பிரதிநிதியும் இடம் பெற்றுள்ளார். இது தமிழக மூத்த பொறியாளர்கள், விவசாய பிரதிநிதிகள் மத்தியில் அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெரியாறு அணை அருகே புது அணை கட்டும் திட்டத்துக்கு ஆய்வு நடத்தி மத்திய அரசிடம் கேட்ட அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த  சூழலில் வைகை அணை நோக்கி கேரளா மூக்கை நீட்டுவது பெரும் ஐயத்தை கிளப்பி உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு இருந்தாலும் 142 அடி வரை  தேக்காமல், முன்கூட்டியே தண்ணீரை வைகை அணைக்கு திறக்க வைக்க திட்டமிட்டு காய்நகர்த்துகிறது.

தமிழக பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் விஜயகுமார், பெரியாறு பாசன விவசாய பிரதிநிதிகள் கூறுகையில், பெரியாறு  அணை கண்காணிப்பு குழு வைகை அணையை ஆய்வு நடத்தும்படி கேரளா கூறும் யோசனை உள்நோக்கம் கொண்டதாக  இருக்ககூடும். இதில்  தமிழகத்திற்கு பாதகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசு சுதாரிக்க வேண்டும். தவறினால் 142 அடி வரை தேக்க விடாமல் வைகை  அணைக்கு திறக்க செய்து முடிச்சுபோடும் அபாயம் ஏற்படும்,’’ என்று எச்சரிக்கின்றனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top