எந்த தவறும் செய்ய வில்லை: சுஷ்மா, வசுந்தரா, சவுகான் ராஜினாமா இல்லை பாரதீய ஜனதா திட்டவட்டம்

201507230217529204_Sushma-Vasundhara-Chauhan-does-not-resignBharatiya_SECVPFஎந்த தவறும் செய்யாத நிலையில், சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ராஜினாமா செய்ய மாட்டார்கள் என்பதை பாரதீய ஜனதா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

லலித் மோடிக்கு உதவியதாக கூறுகிற விவகாரத்தில் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜூம், ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவும், மத்திய பிரதேச அரசு தேர்வு வாரிய ஊழலில் (வியாபம்) முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகானும் பதவி விலகியே தீர வேண்டும் என்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. 2 நாட்களாக அவை பாராளுமன்றத்தை முடக்கின.

இந்தநிலையில் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்து. பிரதமர் நரேந்திர மோடி, கட்சித்தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா, மத்திய பிரதேச முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகானுக்கு பாரதீய ஜனதா கட்சி முழுமையான ஆதரவு கரம் நீட்டியது.

அவர்கள் ராஜினாமா செய்ய மாட்டார்கள் என்பதை கூட்டம், தெளிவுபடுத்தியது.

இந்த கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர்கள் மீது தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிற காங்கிரஸ் கட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்துமாறு தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ‘‘சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரும், ஏழைகளும் முன்னேற்றம் காண்பதற்கு மத்திய அரசு செய்கிற பணிகள், பெருமிதத்துக்கு உரியவை. அவற்றை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்’’ என தலைவர்களையும், எம்.பி.க்களையும் கேட்டுக் கொண்டார்.

கட்சித்தலைவர் அமித் ஷா பேசும்போது, ‘‘திரிக்கப்பட்ட பிரச்சினைகளில், பாராளுமன்றத்தில் இடையூறு செய்கிறவர்களை நாம் அடையாளம் காட்டுவோம். அவர்களை நாம் பாராளுமன்றத்தில் மட்டுமல்ல, வீதிகளுக்கும் எடுத்துச்செல்வோம். காங்கிரஸ் வெற்றி பெற விடமாட்டோம். நமது மாநில அரசுகள், முதல்–மந்திரிகள் நல்ல பணிகளை, நேர்மையுடன் செய்கிறார்கள்’’ என குறிப்பிட்டார்.
45 நிமிடங்கள் நடந்த இந்த கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் பேசினார்.

அப்போது அவர், ‘‘நான் லலித் மோடிக்கு எந்த நிதி ஆதாயமும் வழங்கி விடவில்லை. இந்தியாவை விட்டு அவர் ஓட்டம் பிடிக்கவும் உதவவில்லை. அவருக்கு பயண ஆவணங்களை வழங்குமாறு நான் இங்கிலாந்து அரசை கூறவும் இல்லை. நான் அவர்களிடம் சொன்னதெல்லாம், லலித் மோடி வேண்டுகோள் மீது நீங்கள் (இங்கிலாந்து) எடுக்கிற முடிவு, உங்களுடனான இந்திய உறவை பாதிக்காது என்று மட்டுமே குறிப்பிட்டேன்’’ என்றார்.

மேலும் அவர் பேசும்போது, ‘‘சின்ன துரும்பை காங்கிரசார் தூண் ஆக்க முயற்சிக்கிறார்கள். இங்கே துரும்பு கூட இல்லை’’ என கூறினார்.

இந்த கூட்டத்தின்போது பாரதீய ஜனதா எம்.பி.க்களுக்கு 2 கையேடுகள் வழங்கப்பட்டன. ஒன்று, ‘வியாபம்: கட்டுக்கதைகளும் உண்மைகளும்’, மற்றொன்று காங்கிரஸ் ஆளும் மாநில ஊழல்கள் பற்றியது ஆகும்.
கூட்டம் முடிந்த பின்னர் பாராளுமன்ற விவகாரங்கள் துறை ராஜாங்க மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் பேசியபோது, பிரதமர் மோடி, கட்சித்தலைவர் அமித் ஷா, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பேச்சின் அம்சங்களை குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, ‘‘பிரச்சினைகள் மீது விவாதம் நடத்த காங்கிரஸ் விரும்பவில்லை. ஒழுங்கின்மையை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. பிரச்சினைகளை விவாதிப்பதில் ஒரு அங்குலம் கூட நாங்கள் பின்வாங்க வில்லை. ஆனால் காங்கிரஸ் பல மைல் தூரம் விலகி ஓடுகிறது. எந்த வகையிலும் நாங்கள் எடுத்து வைத்த அடியில் இருந்து பின்வாங்க மாட்டோம். முன்னோக்கி வலுவாக நடை போடுவோம்’’ என குறிப்பிட்டார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top