சமரசப் பேச்சுக்கு உத்தரவிடும் அதிகாரம்: மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் விளக்கம்

chennai-metro_1393137149_1393137170ஒப்பந்தப் பணி தொடர்பாக கேமன் நிறுவனத்துடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு உத்தரவிட உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக, மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இதுதொடர்பாக கேமன் இந்தியா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
சென்னை, சிந்தாரிப்பேட்டை மே தினப் பூங்காவில் இருந்து தேனாம்பேட்டை வழியாக சைதாப்பேட்டை வரை 9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் ஒப்பந்தப் பணியை கடந்த 2011-ஆம் ஆண்டு எங்கள் நிறுவனம் பெற்றது.
இந்தப் பணியை ரஷிய நாட்டைச் சேர்ந்த மாஸ்மெட்ரோ நிறுவனத்துடன் சேர்ந்து மேற்கொண்டு வந்தோம். மேலும், இந்தப் பணிக்காக மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ரூ. 15 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளித்துள்ளோம்.
மேலும் ஒப்பந்தத்தின்படி, 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதியில் இருந்து 1,430 நாள்களுக்குள் சுங்கப்பாதை அமைக்கும் பணியை எங்கள் நிறுவனம் முடிக்க வேண்டும். ஆனால், சுரங்கப்பாதை அமைப்பதற்கான நிலத்தை எங்கள் வசம் ஒப்படைப்பது, போக்குவரத்து மாற்றத்துக்கான ஒப்புதலைப் பெறுவது உள்ளிட்ட பணிகளின் தாமதத்தால் சுரங்கப்பாதை பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பல கடிதங்களை எழுதியிருந்தோம். அதில், சுரங்கப்பாதை அமைக்கும் பணியை முடிக்க 2018-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதி வரை கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்திருந்தோம்.

இந்த நிலையில், சுரங்கப்பாதை அமைக்கும் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு, மாஸ் மெட்ரோ நிறுவனத்தினர் ரஷியா சென்று விட்டனர். இதையடுத்து எங்கள் நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தப் பணியை ஏன் ரத்து செய்யக் கூடாது? என்று விளக்கம் கேட்டு கடந்த மே 11-ஆம் தேதி மெட்ரோ ரயில் நிர்வாகம் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
எங்கள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தப் பணியை ரத்து செய்யக் கூடாது எனவும், எங்கள் நிறுவனம் கொடுத்த வங்கி உத்தரவாதத் தொகையை எடுக்கக் கூடாது எனவும் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி எஸ்.விமலா முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒரு வழக்கில் இரு தரப்பினரையும் மாற்றுமுறை சமரசத் தீர்வு முறையின்படி பேச்சுவார்த்தையில் ஈடுபடுபடுமாறு உத்தரவிட உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்றார். பிறகு, வழக்கு விசாரணையை வரும் ஜூலை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top