‘’சர்வதேச பாதுகாப்பு விதிகளுக்கு அப்பாற்பட்டு 8 அணு உலைகளை அமைக்க அமெரிக்காவோடு ஒப்பந்தம்செய்தவர் மன்மோகன் சிங்’’ – எம்.கே.நாராயணன்

MK NARAYANANஅமெரிக்கா விதித்த கடுமையான நிபந்தனைகளின் காரணமாக, இந்திய-அமெரிக்க அணு உலை ஒப்பந்தத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கைவிட நினைத்தார் என்று அவரது முன்னாள் உதவியாளர் எம்.கே.நாராயணன் தெரிவித்தார்.
 இந்தியா-அமெரிக்கா இடையே அணு உலை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையிலான கருத்தரங்கம் வாஷிங்டனில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
 

அந்த நிகழ்ச்சியில், அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் காண்டலிசா ரைஸ் பேசுகையில், “இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக கடந்த 2005-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அணு உலை ஒப்பந்தத்தை மன்மோகன் சிங் கைவிட நினைத்தார்என்று பேசினார்.
 

இதைத்தொடர்ந்து பேசிய எம்.கே.நாராயணன், ரைஸின் கருத்திலிருந்து முரண்பட்டு சில விளக்கங்களைத் தெரிவித்தார். அமெரிக்கா விதித்த சில கட்டுப்பாடுகளுக்கு உடன்பட முடியாத சூழல் எழுந்த காரணத்தால்தான் அணு உலை ஒப்பந்தத்தை கைவிட மன்மோகன் நினைத்தார் என்று அவர் கூறினார்.
 இதுகுறித்து நாராயணன் மேலும் கூறியதாவது:

 கடந்த 2005-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இரு நாடுகளுக்கு இடையே அணு உலை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாக அறிவிப்பு வெளியாவதற்கு முந்தைய நாளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதுதொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
 சர்வதேச பாதுகாப்பு விதிகளுக்கு அப்பாற்பட்டு 6 அல்லது 8 அணு உலைகளை இந்தியா அமைத்துக் கொள்ள முதலில் அமெரிக்கா சம்மதித்தது. ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகும் இறுதி தருவாயில், அந்த அணு உலைகளை 2-ஆகக் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்தது.
 

அமெரிக்க வெளியுறவுத் துறையில் இருந்த பெரும்பாலான அதிகாரிகள், இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இந்தியாவுக்கு பாடம் கற்பிக்க நினைத்தார்கள். 2 அணு உலைகளை மட்டுமே அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைக்கு உடன்படாத மன்மோகன் சிங், அணு உலை ஒப்பந்தத்தை கைவிட நினைத்தார்.
 இந்தத் தகவல் வெள்ளை மாளிகைக்குக் கிடைத்த பின்னர், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இந்தியத் தரப்பை சமாதானப்படுத்துவதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் ரைûஸ மன்மோகன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தார்.
 

ஆனால், அவரைச் சந்திக்க மன்மோகன் மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து, அப்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்கைச் சந்தித்து ரைஸ் பேசினார். இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா உடன்படுவதாக உறுதி அளிக்கப்பட்ட பின்னரே, அணு உலை ஒப்பந்தத்துக்கு மன்மோகன் சம்மதித்தார். இந்தியா-அமெரிக்கா இடையேயான அணு உலை ஒப்பந்தம், மன்மோகன் இல்லாவிட்டால் கையெழுத்தாகி இருக்காது என்று எம்.கே.நாராயணன் தெரிவித்தார்.
 இந்திய-அமெரிக்க அணு உலை ஒப்பந்தத்துக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவில் அதுவரை இல்லாத அளவுக்கு புதிய வளர்ச்சி எட்டப்பட்டத்தாகவும், வர்த்தகம் – ராணுவத்தில் உள்ள ஒருங்கிணைப்பு மேலும் வலுப்பட்டுள்ளதாகவும் கருத்தரங்கில் பங்கேற்ற இரு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top