அமெரிக்க தீர்மானம் குறித்து கவலையில்லை: ராஜபக்சே பேட்டி

RAJAPAKSAஐ.நா. மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தைப் பற்றி தான் கவலைப்பட போவதில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளையின் யோசனையான இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சே தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அந்த தீர்மானம் குறித்து எங்களுக்கு எந்தவிதமான கவலையும் இல்லை. என்னையும், எனது அரசையும் குறிவைத்து சில சக்திவாய்ந்த நாடுகள் செயல்படுகின்றன.

இதுபோன்ற பரப்புரைகளை எதிர்க்கட்சியினரும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் ஆணையர் நவநீதம் பிள்ளை சமீபத்தில் இலங்கை வந்திருந்தார். 4 நாள்கள் தங்கியிருந்த அவர் தவறான தகவல்களை திரட்டிச் சென்றார். இப்போது அதன் அடிப்படையில் இந்த தீர்மானம் கொண்டு வரப் பட்டுள்ளது. அதை நாங்கள் நிராகரிக்கிறோம்.இதே போன்ற தீர்மானங்கள், இதற்கு முன்பு கியூபா, இஸ்ரேல் மீது கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, நாங்கள் மட்டுமல்ல. பல நாடுகளும் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளன.

பிரிவினையை கோரிய விடுதலைப் புலிகளின் போராட்டத்தை முடிவுக்குகொண்டு வந்துள்ளதன் மூலம் இலங்கையில் வசிக்கும் அனைவரும் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தியுள்ளேன்.
மனித உரிமை தொடர்பான நடவடிக்கை அனைத்தையும் எடுத்து வருகிறோம். காணாமல் போனவர்களை பற்றி விசாரிக்க குழு அமைத்துள்ளோம்” என்றார் அவர்.

ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இத் தீர்மானத்தினால் அம்மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் இல்லை எனவும், இலங்கையில் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா. மாநாட்டில் இந்தியா புதிய தீர்மானம் ஒன்றினை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஈழ ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top