கடும் மழையினால் அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

4fe6227a-7fe5-4740-823f-f116ecb3f626_S_secvpfஅமர்நாத் குகைக் கோயிலை சுற்றியுள்ள பகுதியில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பனி லிங்கம் வடிவில் தோன்றும் சிவ பெருமானை தரிசிப்பதற்கு செல்ல தயாராக இருந்த யாத்ரீகர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த முதல் தேதி தொடங்கியது.

59-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த யாத்திரையில் மலைப்பாதை வழியாக நடந்து செல்ல 2 லட்சத்து 4 ஆயிரத்து 508 பேரும், ஹெலிகாப்டர் மூலம் பல்டாக் மற்றும் பாஹல்காம் பகுதியில் இருந்து பஞ்தர்னியை சென்றடைய 22 ஆயிரத்து 104 பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.

இன்று காலை முதல் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதையடுத்து, யாத்திரைக்கான குறுகலான மலைப்பாதை வழியில் செல்லும் பக்தர்கள் கால் வழுக்கி கீழே விழுந்து காயமடையும் அபாயத்தை தடுக்கும் வகையில் பல்டாக் மற்றும் பாஹல்காம் பகுதியில் இருந்து குகைக் கோயிலை நோக்கி புறப்பட்டு செல்லவிருந்த இன்றைய யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இன்றைய மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவால் சுமார் 300 கிலோ மீட்டர் நீளமுள்ள ஜம்மு – காஷ்மீர் நெடுஞ்சாலையின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளது. அந்த இடங்களில் போக்குவரத்து தடையும் ஏற்பட்டுள்ளது.

இதனால், மழை நின்று குகைக் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை சீரடையும் வரை அடிவார முகாம்களில் தங்கியிருக்கும்படி யாத்ரீகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரத்து 441 யாத்ரீகர்கள் அமர்நாத் குகைக் கோயிலை தரிசித்துள்ளனர் என்பது, குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top