1965 மொழிப்புரட்சி மீண்டும் வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை!

vaiko long 1அரசு பள்ளிகளில் மீண்டும் இந்தியை கட்டாய பாடமாக்கும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டால் மீண்டும் 1965 மொழிப்புரட்சி வெடிக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் கலந்தாலோசனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும், மதுரையில் ஜூலை 20, கோவையில் ஜூலை 22, சென்னையில் ஜூலை 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் செய்திகள் வந்துள்ளன. இக்கூட்டங்களில் கருப்பொருளாக 13 தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதில் 11வது தலைப்பில், மொழியை வளர்த்தல் என்று குறிப்பிட்டு அதில் மும்மொழிக் கொள்கையை கொண்டு வருவது தொடர்பாக பல்வேறு குழுக்களுக்கிடையே கலந்துரையாடலுக்கு 9 வகையான கேள்விகள் இடம் பெற்றுள்ளன. மேலும் தமிழ் மட்டுமின்றி சமஸ்கிருத மொழியை வளர்ப்பதற்கான கேள்விகளும் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்திய பின்னர், தமிழ்நாட்டு பள்ளிகளில் மும்மொழி கல்வித் திட்டத்தை செயற்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இந்தியைக் கட்டாயப் பாடமாகத் திணித்ததால் ராஜாஜி ஆட்சிக்கு எதிராக தமிழகம் 1937 இல் போர்க்கோலம் பூண்டது. இந்தியா விடுதலை அடைந்த பின்னர், இந்திதான் இந்நாட்டின் ஆட்சி மொழி என்று அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்ததை செயற்படுத்த மத்திய அரசு முயன்றபோது 1965 இல் வரலாறு காணாத மொழிப்புரட்சி தமிழகத்தில் வெடித்தது. கீழப்பழுவூர் சின்னச்சாமி உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தனர். தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழக இளைஞர்களாலும், பள்ளி, கல்லூரி மாணவர்களாலும் எழுச்சிகரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டது.

1967 இல் பேரறிஞர் அண்ணா முதல்வர் பொறுப்பை ஏற்றவுடன் இனி தமிழ்நாட்டில் இருமொழி திட்டம்தான் இருக்கும் என்று சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார். தமிழ்நாட்டில் 47 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருக்கும் இருமொழி திட்டத்தை மாற்றி மும்மொழி திட்டத்தை செயற்படுத்த ஜெயலலிதா அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். தமிழகத்தில் விரும்புகிறவர்கள் இந்தி மொழியைப் படிப்பதற்கும் தற்போது எந்த தடையும் இல்லை. ஆனால் பள்ளிகளில் மீண்டும் இந்தியை கட்டாய பாடமாக்கும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டால் மீண்டும் 1965 மொழிப்புரட்சி வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்கிறேன்.

பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய இந்திய துணைக் கண்டத்தில், ஒரு சிறு பகுதி மக்களின் மொழியான இந்தியை, பிற தேசிய இனங்கள் மீது கட்டாயமாக திணிக்கும் முயற்சிகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்தியாவின் ஆட்சிமொழியாக அரசமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க வேண்டும் என்று கோரிக்கை பல ஆண்டுகளாக வலுத்து வருகின்றது.

இந்நிலையில் ஜெயலலிதா அரசு, தமிழ்நாட்டில் இந்திக்கு மகுடம் சூட்ட முயற்சியில் இறங்கி இருப்பதை ஏற்க முடியாது. இந்துத்துவா சக்திகளின் திட்டத்தை செயற்படுத்த சமஸ்கிருத மொழியை பள்ளிகளில் நுழைக்கும் திட்டமும் கண்டிக்கத்தக்கதாகும். எனவே தமிழக அரசு, தற்போதுள்ள இருமொழி கல்வி திட்டத்தை மாற்றி, இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top