மகளிர் தினத்தன்று விஜய் மல்லையாவை வறுத்தெடுத்த பெண் ஊழியர்கள்!

kingfisher employeeகடந்த 18 மாதங்களாக தங்களுக்கு சம்பளமே வழங்கப்படாததால் கொந்தளித்து போயுள்ள கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் தங்கள் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையாவுக்கு அதிருப்தி கடிதம் ஒன்றினை எழுதியுள்ளனர்.

உலகமே நேற்று மகளிர் தினத்தை கொண்டாடிய வேளையில் தாங்கள் மட்டும் எந்த அளவுக்கு மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவருக்கு உணர்த்தும் விதமாக பெண் ஊழியர்கள் இக்கடிதத்தை எழுதியுள்ளனர். இந்தக் கடிதத்தின் மூலம் மல்லையாவின் மறுபக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர் இப்பெண் ஊழியர்கள்.

அந்தக் கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதிலிருந்து சில பகுதிகள் பின்வருமாறு:-

1. இந்தக் கடிதத்தை எழுதும் கட்டாய நிலைக்கு எங்களை கொண்டு வந்து விட்டீர்கள் மல்லையா. நாங்கள் பல வருடங்களாக உங்களது நிறுவனத்திற்காக உழைத்திருக்கிறோம். உலகின் மிகப் பிரபலமான புகழ் பெற்ற விமான நிறுவனமாக கிங்பிஷர் திகழ கடுமையாக பாடுபட்ட நாங்கள் இன்று மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் நின்று கொண்டிருக்கிறோம்.

வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய ஒருவர், கடவுளுக்கு பயந்த ஒருவர் இப்படி மனிதாபிமானமே இல்லாதவராக, தொழில் திறன் இல்லாதவராக, சக மனிதர்களை மதிக்கத் தெரியாதவராக மாறிப் போவார் என்று சத்தியமாக நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

2. நீங்கள் சரியில்லாதவர் என்று பலரும் சொன்னபோது கூட நாங்கள் அதை நம்பவில்லை. உங்களைத்தான் நம்பினோம். உங்களைப் பற்றியும், உங்களது குழுமத்தைப் பற்றியும் பலரும் அவதூராக சொன்னபோதும் கூட அதை நாங்கள் நம்பவில்லை. உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தோம்.

3. ஆனால் எங்களது நம்பிக்கையை நீங்கள் சிதைத்து விட்டீர்கள். எங்களுக்குத் துரோகம் இழைத்து விட்டீர்கள். நாங்கள் இப்போது உங்களிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம். விமான ஊழியர்களை உங்களது வீட்டு விருந்துகளில் கூட வேலை பார்க்க வைத்த நீங்கள் எங்களுக்கு உரிய ஊதியம் தர மறுப்பது மட்டும் ஏன்?

4. கடந்த 18 மாதமே சம்பளமே இல்லாமல் நாங்கள் இருக்கிறோமே நாங்கள் எப்படி வாழ்க்கையை கழிக்கிறோம் என்று ஒரு நாளாவது நீங்கள் சிந்தித்தடுண்டா? எங்களில் பலரது குடும்ப உறுப்பினர்கள் உங்களது நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்களே அதுவாவது உங்களுக்கு நினைவுள்ளதா?

5. எங்களை இருட்டில் தள்ளி ஏன் எங்களது வாழ்க்கையை அழித்தீர்கள்?. ஏன் எங்களுக்கு பொய்யான நம்பிக்கையை அளித்தீர்கள்?. எங்களால் இப்போது புதிய வேலையைத் தேட முடியவில்லை. ஒட்டுமொத்த நாட்டின் முன்பும் நீங்கள் குற்றவாளியாக உள்ளீர்கள். நீங்கள் வகிக்கும் இந்த எம்.பி. பதவி இந்த நாட்டிற்கே பெருத்த அவமானம்.

6. ஒரு தாயாக எங்களால் எங்கள் குழந்தைகளின் சிறிய ஆசையை கூட நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளோம். அதை நீங்கள் உணர்வீர்களா?. உங்களுக்கும் ஒரு தாய் உண்டு. நீங்கள் செய்வது சரி என்று நீங்கள் கருதுகிறீர்களா?. ராஜ்யசபா தேர்தலில் நீங்கள் ஜெயித்தபோது மீடியாக்கள் முன்பு ஆசி பெற மட்டும் உங்களது தாயைப் பயன்படுத்திக் கொண்டீர்கள். உங்களது தாயாருக்கு நீங்கள் செய்வது தெரிந்தால், நிச்சயம் அவர் உங்களைக் கண்டிப்பார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். உங்களை அவர் நல்வழிப்படுத்துவார் என்று நம்புகிறோம்.

7. வங்கிப் பணத்தையும், பிற நிதி நிறுவனங்களின் பணத்தையும் கடன் என்ற பெயரில் பெற்று ஆடம்பரமாக அதை செலவழித்து வரும் நீங்கள், எங்களுக்கு ஊதியத்தை மட்டும் கொடுக்க மறுக்கிறீர்கள். மறந்தும் போய் விட்டீர்கள்.

8. உண்மையிலேயே பெண்களை நீங்கள் மதிப்பவர்தானா?. அவர்களை அசிங்கப்படுத்தி, வியாபாரப் பொருளாக்கி, மலிவான கவர்ச்சியான பொருளாக அவர்களைப் பார்த்து அதை வைத்து வியாபாரம்தான் செய்து வருகிறீர்கள். உங்களது சுய நலத்துக்காகவே பெண்களைப் பயன்படுத்துகிறீர்கள். டெல்லி பெண் கற்பழிப்பு சம்பவத்தின்போது அதி விரைவு கோர்ட்டை அமைக்க வேண்டும் என்று ட்வீட் செய்த நீங்கள், நாங்கள் எந்த கோர்ட்டுக்குப் போனால் எங்களுக்கு சம்பளம் கிடைக்கும் என்பதையும் கூறி விடுங்கள்.

9. உங்களது வீட்டு பார்ட்டிகளுக்கு வரவழைக்கப்பட்ட பல பெண் விமான ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டதையும் உங்கள் ஆசைக்கு இணங்காத பெண்களை சித்திரவதை செய்ததையும் மறுக்கும் நீங்கள், அது பொய் என்றால் பத்திரிக்கையாளர்கள் முன்பு வந்து வெளிப்படையாக அதனை மறுத்து கூற நீங்கள் தயாரா?

10. ஐபிஎல் குறித்தும், சஹாரா போர்ஸ் இந்தியா குறித்தும், ஹை பிளிட்ஸ் குறித்தும் டிவிட்டரில் செய்தி தந்து கொண்டே உள்ளீர்கள். ஆனால் உங்களது நிறுவன ஊழியர்கள் குறித்து ஒரு முறையாவது கவலைப்பட்டு டிவிட் அனுப்பியிருப்பீர்களா?

11. உங்களது நிறுவன ஊழியர் ஒறுவரின் மனைவி தற்கொலை செய்தபோது கூட உங்களது மனம் அசையவில்லையே. சம்பளம் இல்லாத சோகத்தில் அந்தப் பெண் உயிரை மாய்த்துதக் கொண்டது கூட உங்களை அசைக்கவில்லையே. இதுகுறித்து டெல்லி போலீஸ் கூட கவலைப்படவில்லையே. ஏன் நீங்கள் அவர்களை விலைக்கு வாங்கி விட்டீர்களா?

12. ஒட்டுமொத்த உலகமே மகளிர் தினத்தைக் கொண்டாடப் போகிறது. ஆனால் எங்களுக்கு மட்டும் கொண்டாட்டம் இல்லை. இந்த நாளில் நாங்கள் எப்படி சித்திரவதைப்பட்டோம், கொடுமையான சூழலில் உள்ளோம் என்பதை சிந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் உங்களது ஆடம்பரமான, கவர்ச்சிகரமான வாழ்க்கை மட்டும் அப்படியே தொடர்கிறது.

13. மல்லையா, உங்களுக்கு வெட்கம், மானம் ஏதாவது இருந்தால் எங்களது வாழ்க்கையின் அவலத்தை நேரில் வந்து பாருங்கள். நிச்சயம் எங்களது நிலை உங்களை மனிதாபிமானம் உள்ள மனிதராக மாற்றும் என்று இப்போதும் நம்புகிறோம்.

இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகள் மூலம் தங்களது ஆதங்கத்தினை அக்கடிதத்தில் மல்லையாவுக்கு வெளிப்படுத்தியுள்ளனர் இப் பெண் ஊழியர்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top