பி.எஸ்.எல்.வி. சி–28 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

பி.எஸ்.எல்.விவணிக ரீதியிலான 5 வெளிநாட்டு செயற்கைகோள்களை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி. சி–28 ராக்கெட் நேற்று இரவு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதன் வணிக கிளையுமான ‘ஆண்டிரிக்ஸ்’ நிறுவனமும் இணைந்து, இங்கிலாந்தைச் சேர்ந்த சர்ரே செயற்கைக்கோள் தொழில்நுட்ப நிறுவனமும் (எஸ்.எஸ்.டி.எல்) வணிக ரீதியில் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்படி ‘டிஎம்சி.3–1’, ‘டிஎம்சி.3–2’, ‘டிஎம்சி.3–3’ ஆகிய 3 செயற்கைகோள், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த, 91 கிலோ எடைக்கொண்ட மைக்ரோ ‘சிபிஎன்டி–1’ என்ற துணை செயற்கைக்கோள், 7 கிலோ எடைகொண்ட ‘டி–ஆர்பிட்செயில்’ என்ற நானோ செயற்கைக்கோள் ஆகிய 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து நேற்று இரவு (வெள்ளிக்கிழமை)  9.58 மணிக்கு பெரும் சப்தத்துடன் தீப்பிழம்பை கக்கியபடி பி.எஸ்.எல்.வி. சி-28 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. 320 டன் எடையும், 44.4 மீட்டர் உயரமும் கொண்ட இந்த ராக்கெட் எக்ùஸல் வகையைச் சேர்ந்தது.

இந்த ராக்கெட் புறப்பட்ட 19 நிமிடம் 16 வினாடிகளில் பூமியில் இருந்து 654.75 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியது. திட்டமிட்ட அந்த உயரத்தை அடைந்ததும், செயற்கைகோள்கள் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது. பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், மூன்றாவது மற்றும் நான்காவது நிலையில் பொருத்தபட்டு இருந்த என்ஜின் வெற்றிகரமாக இயங்கி செயற்கைகோளை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.

ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பி.எஸ்.எல்.வி. சி-28 ராக்கெட் சிறப்பாகச் செயல்பட்டு 5 செயற்கைக்கோள்களையும் துல்லியமாகச் செலுத்தியுள்ளது. இதன்மூலம், வணிக ரீதியில் “இஸ்ரோ’ செலுத்தியதிலேயே அதிக எடை கொண்ட இந்தத் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்று இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் அவர், இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.

இந்த வெற்றியின் மூலம் பி.எஸ்.எல்.வி ராக்கெட் இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் நம்பகமான ராக்கெட்டாக மாறியுள்ளது. இந்த வெற்றி பி.எஸ்.எல்.வி.யின் 29வது வெற்றி ஆகும். மேலும், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படும் ராக்கெட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரோ மூலம் இதுவரை 19 நாடுகளைச் சேர்ந்த 40 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. அதில் கடந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி ஏவப்பட்ட ஸ்பாட்-7 என்ற செயற்கைக்கோள் தான் அதிக எடை (714 கி.கி.) கொண்டது. கடந்த 1999 ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டின் “டிஎல்ஆர்-டியூப்சாட்’ என்ற 45 கி.கி. எடை கொண்ட செயற்கைக்கோள் தான் இஸ்ரோ ஏவிய முதல் வெளிநாட்டுச் செயற்கைக்கோள். இப்போது 1,440 கி.கி. எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவும் அளவுக்கு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேறியுள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி-28 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்ட பின் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இந்த வெற்றியோடு வணிக ரீதியான செயற்கைக்கோள்களை எடுத்துச் சென்ற 5வது ராக்கெட் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் திட்டத்துக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது என்பதை வெளிப்படையாகக் கூற முடியாது. அது இஸ்ரோவின் வர்த்தகத் திறனை பாதிக்கும்.

வணிக ரீதியாக ராக்கெட்கள் செலுத்துவதன் மூலம் இஸ்ரோ தன்னிறைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இப்போது, ஆண்டுக்கு 4 முதல் 5 ராக்கெட்கள் அனுப்பப்படுகின்றன. விரைவில் இது ஆண்டுக்கு 10 ராக்கெட்கள் என அதிகரிக்க வேண்டும். அப்போது, வணிக ரீதியில் அதிகமான ராக்கெட்கள் ஏவப்படும். மேலும், அடுத்ததாக செவ்வாய் கிரகத்துக்கு அல்லது வேறு கிரகங்களுக்கு விண்கலங்களை அனுப்புவது குறித்து யு.ஆர்.ராவ் தலைமையிலான குழு முடிவு செய்யும். அதன்பின், அந்தத் திட்டப் பணிகள் தொடங்கப்படும்.

இந்தியாவுக்கான பிரத்யேக வழிகாட்டி அமைப்புக்காக 4 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 செயற்கைக்கோள்கள் அடுத்த மார்ச் மாதத்துக்குள் அனுப்பப்படும். அடுத்த செயற்கைக்கோள் அக்டோபருக்குள் அனுப்பப்படலாம். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்துக்கு அரசிடம் இருந்து இன்னமும் ஒப்புதல் கிடைக்கவில்லை. ஒப்புதல் பெறப்பட்டதும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படும்.

மங்கள்யான் விண்கலம் நீண்ட நாட்களாக தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்து, இஸ்ரோவின் தொடர்பு எல்லைக்குள் மீண்டும் வந்துள்ளது. இந்தத் திட்டம் மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட உள்ளது. சந்திரயான்-2 திட்டத்திலும் விண்கலம், தரையிறங்கும் கருவி ஆகியவை வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும், விண்கலம் செலுத்தும் தேதி இறுதி செய்யப்படும்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top