மூன்று நாளில் மூன்று மரணங்கள் மத்திய பிரதேச அரசுக்கு நெருக்கடி

201507070354101782_Madhya-PradeshGovernmentCrisis_SECVPFவியாபம் மூலம் பணியில் அமர்ந்த பெண் சப்–இன்ஸ்பெக்டர் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்ததால், மத்திய பிரதேச அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

மத்திய பிரதேச தொழில்முறை தேர்வு வாரியம் (வியாபம்) முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு மாணவர் சேர்க்கை மற்றும் வேலைக்கு ஆட்கள் தேர்வு போன்றவற்றில் ஈடுபட்டு வந்துள்ளது. கடந்த 2009–ம் ஆண்டு முதல் நடந்து வந்த இந்த ஊழலில் அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உயர் அதிகாரிகள் போன்ற முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஐகோர்ட்டு அமைத்துள்ள சிறப்புக்குழுவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த ஊழலில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள், சாட்சிகள் என பலர் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர். இவ்வாறு கடந்த சில ஆண்டுகளில் சுமார் 40–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மேலும் 3 பேர் கடந்த 3 நாட்களில் உயிரிழந்தனர். இது மத்திய பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வியாபம் ஊழலில் பெயர் குறிப்பிடப்பட்டு கடந்த 2012–ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்த நம்ரதா தமோர் என்ற பெண்ணின் பெற்றோரிடம் பேட்டி காண சென்ற டெல்லி டி.வி. நிருபர் அக்ஷய் சிங் கடந்த 4–ந்தேதி ஜபுவாவில் உயிரிழந்தார்.

அவரை தொடர்ந்து இந்த ஊழலில் தொடர்புடைய தேர்வர்களை விசாரித்து வந்த ஜபல்பூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் அருண் சர்மா, டெல்லியில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் நேற்று முன்தினம் பிணமாக கிடந்தார்.

மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தை சேர்ந்தவர் அனாமிகா சிகார்வர் (வயது 25). இவர் சாகர் மாவட்ட போலீஸ் தலைமை அலுவலகத்தில் பயிற்சி சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

வியாபம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்திருந்த இவர், தனது அறையில் இருந்து மாயமாகி இருந்தார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தனது அலுவலகத்துக்கு அருகே உள்ள ஏரியில் நேற்று பிணமாக மிதந்தார்.

இந்த மரணங்கள் குறித்து போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறும்போது, ‘இது வருத்தமானதும், துரதிர்ஷ்டமானதுமான சம்பவம். ஆனால் இந்த சம்பவத்துக்கும் வியாபத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒவ்வொரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தையும் வியாபம் ஊழலோடு தொடர்புபடுத்துவது அழகல்ல’ என்று தெரிவித்தார்.

ஆனால் இதை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, வியாபம் ஊழல் விவகாரத்தில் மத்திய பிரதேச முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என போர்க்கொடி உயர்த்தி உள்ளது. இந்த விவகாரத்தில் நிகழ்ந்துள்ள 45 சாவுகளுக்கும், முதல்–மந்திரியே பொறுப்பு என அவை குற்றம் சாட்டி உள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, ‘இந்த விவகாரத்தில் சிவராஜ் சிங் சவுகானை பதவி நீக்கம் செய்து விட்டு, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்’ என்று கூறினார்.

வியாபம் ஊழலில் அடுத்த மர்ம மரணம் நிகழுமுன் சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் வலியுறுத்தியுள்ளார்.

‘இந்த பிரச்சினைக்கு தார்மீக பொறுப்பேற்று, நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பதை பிரதமர் விளக்க வேண்டும்’ என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பி.சி.சாக்கோ கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் தனது மவுனத்தை கலைக்க வேண்டும் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘வியாபம் ஊழல் விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். எனவே இந்த விஷயத்தில் பிரதமர் இனியும் மவுனமாக இருக்க முடியாது’ என கூறியுள்ளார்.

இந்த பிரச்சினையை ஆம் ஆத்மி கட்சி சுப்ரீம் கோர்ட்டுக்கும் எடுத்து சென்றுள்ளது. அக்கட்சி தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், ‘டி.வி. நிருபர் அக்ஷய் சிங்கின் மரணத்தை தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஊழல் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து வந்த பிறகும் 45 பேர் உயிரிழந்துள்ளதால், இந்த விசாரணையை சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே இந்த ஊழல் விவகாரத்தால் தனது உயிருக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, வியாபம் ஊழலை வெளிக்கொணர்ந்த ஆசிஷ் சதுர்வேதி (26) நேற்று கூறினார். மேலும் இந்த ஊழலில் முதல்–மந்திரிக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் இறந்த டி.வி. நிருபர் அக்ஷய் சிங்கின் உடல் பாகங்கள், பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இதனால் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையை குஜராத் தகோத் மருத்துவமனை டாக்டர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top