முஷாரப் கோரிக்கையின்படி வழக்கை ராணுவ நீதிமன்றத்துக்கு மாற்ற முடியாது: நீதிபதி உத்தரவு

Musharrafதம் மீதான தேசத்துரோக வழக்கை ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக வழக்கை விசாரித்து வரும் நீதிபதிபதிகள் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும் ராணுவ சட்டத்தின் கீழ் இயங்கும் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்றும் முஷாரப் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி பைசல் அராப், முஷாரப்பின் மனுவை விசாரிக்க முகாந்திரம் இல்லை என தெரிவித்ததுடன், அவரது அனைத்து கோரிக்கைகளையும் நிராகரிப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற 11-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் முஷாரப் நேரில் வந்து ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அடுத்த விசாரணையின்போது முஷாரப் நேரில் வரவில்லை என்றால், அவர்மீது ஜாமீனில் வரமுடியாத படி கைதுவாரன்ட் பிறப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, நீதிபதிகளை சிறையிலடைத்தது தொடர்பாக முஷாரப் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு தீவிரவாத தடுப்பு நீதி மன்றத்தில்வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆனால், முஷாரப்பின் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் விசாரணையை 21-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இதைக் கண்டித்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தை புறக்கணித்தனர். இதனால் முஷாரப் தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகவில்லை.

கடந்த 2007-ம் ஆண்டு பாகிஸ் தானில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதையடுத்து, தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை கைது செய்யுமாறு அப்போது அதிபராக இருந்த முஷாரப் உத்தரவிட்டார். இதுகுறித்து, சவுத்ரி முகமது அஸ்லம் கும்மன் கடந்த 2009-ம் ஆண்டு முஷாரப் மீது புகார் செய்ததையடுத்து, அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top