இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சுதந்திர கட்சியின் சார்பில் ராஜபக்சே போட்டி!

ராஜபக்சேஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில்  மக்கள் சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிட ராஜபக்சேவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில், அப்போதைய அதிபர் ராஜபக்சேவை, சிறிசேனா தோற்கடித்தார். புதிய அதிபராக பதவி ஏற்ற சிறிசேனா, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக நியமித்தார்.

அதேநேரம், அரசியல் சட்ட சீர்திருத்தங்களையும், தேர்தல் சீர்திருத்தங்களையும் நிறைவேற்றிவிட்டு, தனது அரசின் 100வது நாளில், நாடாளுமன்றத்தை கலைத்து, புதிய தேர்தலுக்கு வழிவகுப்பதாக உறுதி அளித்தார்.

அதன்படி, அவரது அரசின் 100வது நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைக்கு கருத்து ஒற்றுமை ஏற்படாததாலும், ராஜபக்சே ஆதரவாளர்களின் முட்டுக்கட்டையாலும், நாடாளுமன்ற கலைப்பு தள்ளிப்போனது.

இந்நிலையில், உறுதி அளித்தபடி 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கடந்த 26ஆம் தேதி இரவு கலைத்து, அதற்கான அரசு அறிவிக்கையிலும் கையெழுத்திட்டார். இதையடுத்து, இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில், இலங்கையில் சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராஜபக்சே அறிவிக்கப்படமாட்டார் என அந்நாட்டு அதிபரும், சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேனா அறிவித்திருந்தார். மேலும், எங்களது கூட்டணியில் போட்டியிடுபவர்கள் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார்கள் என்றும், தேர்வாகும் எம்.பி.க்களின் விருப்பத்திற்கேற்ப பிரதமர் நியமிக்கப்படுவார் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று இலங்கையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடந்தத. இதில், இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சே போட்டியிட அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் ராஜபக்சேவும் வேட்பாளராக இருப்பார் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top