இடைத்தேர்தல் நியாயமாக நடக்கவில்லை: இளங்கோவன்

elangovanமதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று மதுரையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் இன்று மதுரை வந்தனர்.

அப்போது இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:–

மோடியின் ஒரு வருட ஆட்சி மக்களுக்கு அவர்கள் செய்த சாதனையைவிட வேதனைதான் அதிகரித்துள்ளது. மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், ஸ்மிருதி இராணி, ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தரா ராஜே, மகராஷ்டிரா மாநில அமைச்சர் பங்கஜ் முண்டே ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விசாரணை நடத்தி அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

தமிழக பாரதீய ஜனதா காமராஜர் பிறந்தநாளை கொண்டாடுவோம் என்று அறிவித்துள்ளார்கள். ஆனால் காமராஜர் டெல்லி சென்றபோது அவரது டெல்லி இல்லத்தில் தாக்குதல் நடத்தியது பாரதீய ஜனதா தான். அதற்கு பிராயசித்தம் தேடுவதற்காக இப்போது அவர்கள் பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள் என கருதுகிறேன்.

ஆர்.கே.நகர் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சக்சேனா, அ.தி.மு.க. வட்டச்செயலாளர் போல செயல்பட்டார். இதனால் தேர்தல் அதிகாரிக்கு எதிராக மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். அவர் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.

2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்காற்றும். ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு கட்சியை மேலும் வலுப்படுத்தி வருகிறோம். தவறும்பட்சத்தில் கூட்டணி ஆட்சியை பெற்றுத் தருவோம்.

தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு குறித்த அறிக்கையை கவர்னரிடம் தரப்பட்டுள்ளது. ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தினால் அவர்களின் பட்டியலை வெளியிடுவோம்.

சென்னை மெட்ரோ ரெயிலுக்கான கட்டணம் டெல்லியில் வசூலிக்கும் மெட்ரோ ரெயில் கட்டணத்தை விட அதிகமாக உள்ளது. எனவே கட்டணத்தை குறைக்க வேண் டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top