பிரான்ஸ் அதிபர்களை, அமெரிக்கா வேவு பார்த்தது’ விக்கி லீக்ஸ் தகவலால் பரபரப்பு

55554444444444444பிரான்ஸ் அதிபர்களை அமெரிக்கா வேவு பார்த்ததாக விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சுவீடன் நாட்டில் இருந்து இயங்கிவரும் விக்கி லீக்ஸ் இணையதளம், உலக நாடுகளையும், தலைவர்களையும் அமெரிக்கா வேவு பார்த்தது, செல்போன் உரையாடல்களை பதிவு செய்தது தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தது.

ஜெர்மனி நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் தொலைபேசிகளை அமெரிக்கா ஒட்டு கேட்டதாகவும், மின்னணு ரீதியில் அவர் வேவு பார்க்கப்பட்டதாகவும் அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ.யின் முன்னாள் ஏஜெண்டு எட்வர்டு ஸ்னோடன் கூறிய தகவல்கள் உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

 

இந்த விக்கி லீக்ஸ் இணையதளம், பிரான்ஸ் நாட்டின் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே, முன்னாள் அதிபர்கள் ஜாக்கிஸ் சிராக், நிக்கோலஸ் சர்க்கோசி ஆகியோரை அமெரிக்காவின் உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. என்னும் தேசிய பாதுகாப்பு முகமை வேவு பார்த்துள்ளதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.

1995–2007 வரையில் ஜாக்கிஸ் சிராக், 2007–2012 வரையில் நிக்கோலஸ் சர்க்கோசி, 2012 முதல் தற்போதைய அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே ஆகியோரை நேரடியாக குறிவைத்து, அமெரிக்க உளவு அமைப்பு வேவு பார்த்துவந்துள்ளதாக விக்கி லீக்ஸ் கூறி உள்ளது. இது தொடர்பான முக்கிய ஆவணங்களையும் விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது.

 

பிரான்ஸ் அதிபர் மாளிகையான பாரீஸ் எலிசீ மாளிகையின் அதிகாரிகள் மற்றும் பிரான்ஸ் அதிபரின் நேரடி கைபேசி எண்கள் வரையில் அனைத்து தகவல்களும் அந்த ஆவணங்களில் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

உலக பொருளாதார நெருக்கடி, கிரேக்க நாட்டின் கடன் நெருக்கடி, பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே நிர்வாகத்துக்கும், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் ஆகியோருக்குமான உறவு ஆகியவை தொடர்பாக பிரான்ஸ் அதிகாரிகள் நடத்திய உரையாடல்களை அமெரிக்காவின் உளவு அமைப்பு இடைமறித்துக்கேட்டு செய்யப்பட்டுள்ள பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

பிரான்ஸ் தலைவர்கள், மந்திரிகள், அமெரிக்காவுக்கான பிரான்ஸ் தூதர், உயர் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களையும் அமெரிக்கா இடைமறித்துக் கேட்டு பதிவு செய்துள்ளதாக விக்கி லீக்ஸ் ஆவணங்கள் காட்டுகின்றன.

பிரான்ஸ் தலைவர்கள் இன்னும் முக்கியமான தகவல்களை குறுகிய காலத்தில் எதிர்பார்க்கலாம் என்று கூறி விக்கி லீக்ஸ் மேலும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

ஆனால் பிரான்ஸ் அதிபர் வேவு பார்க்கப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல்களை அமெரிக்கா மறுத்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், ‘‘பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேயின் தகவல் பரிமாற்றத்தை நாங்கள் குறி வைக்கவில்லை. அப்படி குறிவைக்கவும் மாட்டோம்’’ என்றார்.

இருப்பினும் பிரான்ஸ் அதிபர்கள் அமெரிக்காவால் வேவு பார்க்கப்பட்டு வந்திருப்பது, அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

அமெரிக்காவின் செயலுக்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கூறுகையில், ‘‘நாட்டின் பாதுகாப்புக்கும், நலன்களுக்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிற செயல்களை பிரான்ஸ் பொறுத்துக்கொள்ளாது’’ என கூறினார்.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக அவர், தனது மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள மூத்த மந்திரிகளையும், ராணுவ தளபதிகளையும் அழைத்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

மேலும் விக்கி லீக்ஸ் தகவல்கள் குறித்து விளக்கம் கேட்பதற்காக பிரான்சுக்கான அமெரிக்க தூதருக்கு, பிரான்ஸ் வெளியுறவு மந்திரி லாரன்ட் பாபியஸ் அழைப்பு விடுத்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top