செய்யாத தவறுக்கு 7 ஆண்டு ஜெயில்: ஆளை மாற்றி சிறையிலடைத்த போலீஸ்: ரூ.6 லட்சம் இழப்பீடு; உயர் நீதிமன்றம் அதிரடி

தேனி மாவட்டம் கம்பம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் சத்யா. மனைவியை துன்புறுத்திய வழக்கில் 2005ல் பெரியகுளம் விரைவு  நீதிமன்றம் இவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, சில மாதங்களில் ஜாமீன் பெற்றார்.
ஆனால், வேறொரு குற்றவழக்கில் தலைமறைவாக இருந்த முருகன் என்பவருக்கு பதிலாக,

சத்யாவை திண்டுக்கல் போலீசார் சிறையில் வைத்தே  கைது செய்தனர். இதற்கு வசதியாக அவரது பெயரை சத்யா (எ) முருகன் என போலீசாரே மாற்றி எழுதினர். போலீசாரின் இந்த மோசடி குறித்து,  சிறையில் இருந்தவாறே சத்யா, இலவச சட்டப்பணிகள் ஆணையத்திற்கு மனு செய்தார். திண்டுக்கல் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்து,  ஆள்  மாறாட்டம் உறுதி செய்யப்பட்டதால், சத்யாவை விடுதலை செய்தது. இதையடுத்து 6 ஆண்டு 9 மாதம் 14 நாட்கள் சிறையில் இருந்த சத்யாவின்  உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டது.

மோசடியாக கைது செய்த இன்ஸ்பெக்டர் மாதவன், எஸ்ஐ முருகன் மீது வழக்குப்பதிவு செய்யவும், இழப்பீடு கோரியும் சத்யா ஐகோர்ட் மதுரை  கிளையில் மனு செய்தார்.  சத்யாவின் மருத்துவ செலவுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1.50 லட்சம் வழங்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி எஸ்.நாகமுத்து முன் நடந்தபோது அனைத்து ஆவணங்களுடன் திண்டுக்கல் எஸ்பி சரவணன், மனுதாரர்  சத்யா, எஸ்ஐ முருகன் (தற்போது இன்ஸ்பெக்டர்) ஆஜராகினர்.

மனுதாரர் வக்கீல் ஆர்.அழகுமணி  `இது அப்பட்டமான மனித உரிமை மீறல். சத்யா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இழப்பீடாக ரூ.25  லட்சம் வழங்க வேண்டும்’’ என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘போலீசாரின் தவறான அணுகுமுறையால் ஒருவர் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவார்  என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம். தவறு நடந்துள்ளது தெரிந்தும் எப்படி பதவி உயர்வும், ஓய்வு பெறவும் அனுமதிக்கப்பட்டனர் எனத்  தெரியவில்லை. மனுதாரர் கோரும் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டிற்கு அதிகாரம் உண்டு. மனுதாரர் நாளொன்றுக்கு குறைந்தது ரூ.100 சம்பாதிப்பதாக  கணக்கிட்டால் கூட அவர் சிறையில் இருந்த காலத்திற்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும்.

எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக அரசு ரூ.6 லட்சம் வழங்க வேண்டும். அதில், ரூ.1.50 லட்சம் இடைக்கால நிவாரணத்தை ஒருவாரத்திலும், ரூ.4.50  லட்சத்தை ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள்ளும் வழங்க வேண்டும். இதில் தவறு செய்த அதிகாரிகள், எதற்காக இந்த தவறு நடந்தது,  யார் யாருக்கு  தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரிக்க தேனி எஸ்பி மகேஷை, டிஜிபி நியமிக்க வேண்டும். அவர் 6 வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல்  செய்ய வேண்டும்,’’ என உத்தரவிட்டுள்ளார்.


எஸ்ஐ முருகன் நீதிபதியிடம் கூறுகையில், ‘உயரதிகாரிகளின் வற்புறுத்தலால்தான் சத்யா (எ) முருகன் என குறிப்பிட்டு உத்தரவு பெறப்பட்டது. நான்  சத்யாவை நேரில் கூட பார்த்ததில்லை. கையெழுத்து போட்டது மட்டுமே நான் செய்த தவறு’ என கூறினார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top