ஐ.நா.வில் இலங்கை குறித்த வரைவுத் தீர்மானம் தாக்கல்: இலங்கைக்கு ஆதரவாக இருப்பதாக ஈழ ஆதரவாளர்கள் கண்டனம்!

tamil genocideஇலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்காவின் வரைவுத் தீர்மானம், ஐ.நா மனித உரிமை அவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு ஈழ ஆதரவாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜெனிவாவில் நேற்று தொடங்கிய மனித உரிமை அவையின் கூட்டத்தில், அமெரிக்காவுடன் இணைந்து பிரிட்டன், மொரீசியஸ், மாண்டிநெக்ரோ, மேஸிடோனியா ஆகிய நாடுகளும் வரைவுத் தீர்மானத்தை தாக்கல் செய்தன. இதில், இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் உள்நாட்டு விசாரணை தோல்வியடைந்திருப்பதால் சுதந்திரமான, சர்வதேச விசாரணை தேவை என்பது தொடர்பான நவநீதம் பிள்ளையின் பரிந்துரையை வரவேற்பதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனித உரிமைச் சட்டத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்த தனிநபர்களை அதற்கு பொறுப்பேற்கச் செய்வது தொடர்பாக உண்மைகளை கண்டறியும் நடைமுறை மற்றும் தேசிய இழப்பீட்டுக் கொள்கை ஆகியவற்றை உருவாக்குமாறு தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தப்படி, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு தேவையான அதிகாரங்களை வழங்க வேண்டும் எனவும் வரைவுத் தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா முன்மொழிந்துள்ள இந்த வரைவுத் தீர்மானம் மீது இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் இன்று பதில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். இம்மாத இறுதியில் இத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு ஈழ ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலையை நீர்த்துப் போகச் செய்வதற்கும், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆதரவு செயல்தளத்தினை முடக்குவதற்கும் மட்டுமே இந்த தீர்மானம் பயன்படப் போகிறது என அவர்கள் கூறினர்.

அமெரிக்கா கடந்த வருடத்தைப் போலவே இவ்வருடமும், இலங்கைக்கு தமிழினப் படுகொலையை நடத்தி முடிக்க மேலும் அவகாசத்தினை கொடுத்திருக்கிறார்கள் என தெரிவித்த அவர்கள், ஐ.நாவும், அமெரிக்காவும், இந்தியாவும், இங்கிலந்தும் இணைந்து ”ஆட்சி மாற்றமே தமிழர்களுக்கு தீர்வு” என்கிற வேலையை செய்கின்றன. ஆனால் இதனால் அம்மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பது தான் உண்மை என்று தெரிவித்தனர்.

மேலும் தனது ஆட்சி பறிபோய்விடும் என்கிற ஒரே பயத்தில் மட்டுமே இலங்கை அதிபர் ராஜபக்சே இத் தீர்மானத்தினை எதிர்க்கிறார் எனவும், அமெரிக்கா நேற்று சமர்ப்பித்துள்ள தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை நடைபெற வழிவகுப்பது ஒன்று மட்டுமே அம்மக்களுக்கு உரிய நீதியினைப் பெற்றுத் தர முடியும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top