பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நேற்றைய ஆட்ட முடிவுகள்!

Rafael Nadal of Spain shakes hands with Novak Djokovic of Serbia after winning their men's singles final match at the French Open Tennisகிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் 9–வது நாளான நேற்று 4–வது சுற்று ஆட்டங்கள் நடந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச் 20–ம் நிலை வீரர் கேஸ்கியூட் (பிரான்ஸ்) மோதினர்.

இதில் ஜோகோவிச் 6–1, 6–2, 6–3 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதியில் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரபேல் நடால் (ஸ்பெயின்)– அமெரிக்காவின் சோக் பலப்பரீட்சை நடத்தினர். இதில் நடால் 6–3, 6–1, 5–7, 6–2 என்ற செட் கணக்கில் சோக்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். கால் இறுதியில் ஜோகோவிச் – நடால் மோதுகின்றனர்.

இதேபோன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர், மான்பில்ஸ்சை (பிரான்ஸ்) சந்தித்தார்.

17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான பெடரர் 6-3, 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் மான்பில்ஸ்சை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார். கால் இறுதியில் பெடரர், வாவ்ரிங்காவுடன் (சுவிட்சர்லாந்து) மோதுகிறார். மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீரர் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 6-4, 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மி ஷார்டியை (பிரான்ஸ்) வீழ்த்தி கால் இறுதிக்குள் 5-வது முறையாக அடியெடுத்து வைத்தார்.

இன்னொரு ஆட்டத்தில் 2013-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் 2-வது இடம் பெற்ற ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் 6-2, 6-2, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்க ஓபன் சாம்பியனான மரின் சிலிச்சை (குரோஷியா) தோற்கடித்து கால் இறுதிக்குள் நுழைந்தார். கால் இறுதியில் டேவிட் பெரர், ஆன்டி முர்ரேவை எதிர்கொள்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 4–வது சுற்று ஆட்டம் ஒன்றில் 4–ம் நிலை வீராங்கனையான கிவிட்டோ (செக்குடியரசு) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் 20–ம் நிலை வீராங்கனை பக்ஷின்ஸ்க்கிடம் (சுவிட்சர்லாந்து) 2–6, 6–0, 6–3 என்ற செட் கணக்கில் தோற்றார். கிவிட்டோ கடந்த ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை வென்று இருந்தார்.

ரூமேனியாவை சேர்ந்த மிதுயை 6–1, 6–3 என்ற நேர் செட் கணக்கில் சகநாட்டு வீராங்கனை உத்வான்சக் வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சக நாட்டு வீராங்கனை சலோன் ஸ்டீபன்சை எதிர்கொண்டார். 19 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அனுபவ வீராங்கனையான செரீனா முதல் செட்டை 1-6 என்ற கணக்கில் இழந்தார். அதன் பின்னர் சுதாரித்து ஆடிய செரீனா அடுத்த 2 செட்களையும் 7-5, 6-3 என்ற கணக்கில் தனதாக்கி வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

செரீனா வில்லியம்ஸ் கால் இறுதியில் இத்தாலி வீராங்கனை சாரா எர்ரானியை சந்திக்கிறார். சாரா எர்ரானி 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸ்சை தோற்கடித்து கால் இறுதிக்குள் நுழைந்தார்.

இன்னொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருசா 6-3, 6-4 என்ற நேர்செட்டில் இத்தாலி வீராங்கனை பிளாவியா பென்னட்டாவை தோற்கடித்து கால் இறுதிக்குள் நுழைந்தார். அவர் கால் இறுதியில் லூசி சபரோவாவை சந்திக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top