ஆகஸ்டு 31–ந்தேதி கடைசி நாள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய புதிய படிவம்

incometax departmentவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய புதிய படிவத்தை மத்திய நிதி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரிய உத்தரவின்படி வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான புதிய படிவத்தை 2 மாதங்களுக்கு முன்பு வருமானவரி இலாகா அறிமுகம் செய்தது.

அதில் கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் எண், மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பயணங்கள், வங்கிகளில் செயலற்ற நிலையில் உள்ள கணக்குகள், வங்கி ஐ.எப்.எஸ்.கோடு, வைத்துள்ள கூட்டுக் கணக்குகளின் விவரம் போன்ற பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை அந்த படிவத்தில் இணைக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தது.

தனிப்பட்ட முறையிலான தகவல்களை கேட்ட வருமான வரி இலாகாவின் புதிய படிவத்துக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அப்போது அமெரிக்காவில் இருந்த மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, இந்த படிவத்தை உடனடியாக நிறுத்தி வைக்கும்படியும், வருமானவரி கணக்குதாக்கல் செய்யும் படிவம் விரைவில் எளிமைப்படுத்தி வெளியிடப்படும் எனவும் கூறியிருந்தார்.

இதனால் வருமானவரி தாக்கல் செய்வதற்கான அந்த படிவம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சகம் நேற்று புதிய படிவம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், ‘‘வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான 3 பக்கங்கள் கொண்ட புதிய படிவத்தை நிதி அமைச்சகம் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த படிவத்தில் வருமானவரி செலுத்துபவரின் வெளிநாட்டு பயணத்தை பொறுத்தவரை பாஸ்போர்ட் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும். வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான தகவல்களையோ, அதற்காக செலவு செய்த தொகையையோ இணைக்கத் தேவையில்லை. வங்கி கணக்கை பொறுத்தவரை செயல்பாட்டில் உள்ள நடப்பு மற்றும் சேமிப்பு வங்கி கணக்குகளை மட்டுமே தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது’’ என்று கூறப்பட்டு உள்ளது.

தற்போது நிதி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ள புதிய ஐ.டி.ஆர்.2 மற்றும் ஐ.டி.ஆர்.2 ஏ ஆகிய படிவங்கள் 3 பக்கங்களை மட்டுமே கூடுதலாக கொண்டு உள்ளது. மற்ற விவரங்களை வருமானவரி செலுத்துவோர் வழக்கம்போல் அட்டவணைகளில் நிரப்பலாம் என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.

தவிர, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 31–ந்தேதியுடன் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிந்து விடும். தற்போது, இந்த அவகாசம் ஆகஸ்டு மாதம் 31–ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் தனது அறிக்கையில், ‘‘புதிய படிவங்களை உருவாக்குவதற்கான மென்பொருள் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. இவை ஜூன் மாத 3–வது வாரத்தில்தான் இணையதளம் மூலம் தாக்கல் செய்வதற்கு தயாராகும். எனவே வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்டு மாதம் 31–ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’’ எனக் கூறி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top