பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் துப்பாக்கிச் சூடு: 19 பேர் பலி!

pakistan_bus_attackபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் சென்று கொண்டிருந்த 19 பேரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இருந்து கராச்சிக்கு நேற்று நள்ளிரவு சென்ற 2 பேருந்துகளை, மஸ்தாங் என்ற இடத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் மடக்கினர். பாகிஸ்தான் ராணுவ உடையில் வந்த அவர்கள், திடீரென பேருந்தில் புகுந்து பயணிகளை சரமாரியாகச் சுட்டனர். இதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயணிகளின் உடல்களை அங்குள்ள மலைப்பகுதியில் வீசிவிட்டு அவர்கள் தப்பிவிட்டனர். தகவலறிந்து வந்த பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொடூரமான இந்தத் துப்பாக்கிச் சூடு பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மகாணத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள், தனிநாடு கேட்டு நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இருவாரங்களுக்கு முன்பு கராச்சி நகரில் சென்று கொண்டிருந்த பேருந்தை நடுவழியில் நிறுத்தி, அதில் பயணம் செய்த 43 பேரை ஐஎஸ் அமைப்பினர் சுட்டுக் கொன்றனர். அதேபோல் இந்த சம்பவம் நடந்துள்ளதால், ஐஸ் அமைப்புக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானில் தலிபான் அமைப்பினரும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இதனால் அப்பாவி பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top