விமான நிலைய விரிவாக்கத்துக்காக வீடுகளை இழக்க முடியாது கோவையில் போராட்டம்

201505280014499323_For-airport-expansion-will-not-lose-their-homes-and-in-front_SECVPFகோவை விமானநிலைய விரிவாக்கத்துக்காக நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்போர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

கோவை பீளமேடு விமானநிலையம் சர்வதேச விமானநிலையமாக அறிவிக்கப்பட்டு, விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்கப்பணிகளுக்கு 627 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் ராணுவத்துக்கு சொந்தமான 137 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 490 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சின்னியம்பாளையம், ஜி.கே.ஆர்.நகர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நிலங்களை கையகப்படுத்தவும், இந்த நிலத்துக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக வருவாய்த்துறை அதிகாரி குணசேகரன் என்பவர் நியமிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

சின்னியம்பாளையம் ஜி.கே.ஆர். நகர் பகுதியில் நிலம் மற்றும் வீடு மற்றும் கட்டிடங்களை ஆய்வு செய்து அதற்கான மதிப்பீடுகளை தயாரிக்கும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை அந்தபகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டனர்.

நேற்று காலை சின்னியம்பாளையம் ஜி.கே.ஆர். நகரை சேர்ந்த குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் ரங்கநாதன், குணசேகர், சிவப்பிரகாஷ் ஆகியோரின் தலைமையில் அந்த பகுதியில் வசிக்கும் ஆண், பெண்கள் திரளாக வந்து கலெக்டர் அலுவலகம் முன் திடீரென்று முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:–

நாங்கள் நீண்டகாலமாக ஜி.கே.ஆர். நகர் பகுதியில் குடியிருந்து வருகிறோம். விமான நிலைய விரிவாக்கம் என்ற பெயரில் எங்களது வீடுகளை இழக்க நாங்கள் தயாராக இல்லை. மதிப்பீடு என்ற பெயரில் ஆய்வு செய்வதையும் விரும்பவில்லை. விமானநிலையத்தின் தென்கிழக்கு பகுதியில் ஏராளமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை எடுத்து விமானநிலைய விரிவாக்க பணிகளை மேற்கொள்ளலாம் அல்லது இப்போது இருக்கும் விமானநிலையத்தை விரிவுபடுத்தாமல் இதேநிலையில் வைக்கலாம். பெங்களூர், ஐதராபாத்தில் மேற்கொண்டதை போல் நகரை விட்டு 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு விமானநிலையத்தை மாற்றலாம். இந்த முடிவுகளை மேற்கொண்டால் வசதியாக இருக்கும். இதுகுறித்து நிலம் கையகப்படுத்தும் அதிகாரி மற்றும் கலெக்டரிடம் வற்புறுத்தியுள்ளோம். இந்த ஆய்வுப்பணியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். நிரந்தரமாக நிறுத்த வேண்டும். இவ்வாறு குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top